கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி பல வருடங்களாகவே புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் கேட்கப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வளவு பெரிய நாவலை படமாக எடுக்க இன்றும் எந்த இயக்குனரும் முன்வரவில்லை.
பொன்னியின் செல்வனைப் போலவே தற்போது பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் நாவல் சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி. பெரிய அளவில் பேசப்பட்டு வரும் இந்த நாவலை யார் படமாக எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கான விடை இன்று வரை கிடைக்கவில்லை என்பதே உண்மை. பின்வரும் இயக்குனர்களில் எந்த இயக்குனர் பொன்னியின் செல்வனையும் வேள்பாரியையும் இயக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை கமெண்டில் தெரிவியுங்கள்.
1. ராஜ மௌலி
பாகுபாலி 1, பாகுபலி 2, நான் ஈ என்று பிரம்மாண்ட வெற்றி படங்கள் தந்தவர் இயக்குனர் ராஜ மௌலி. கடினம் என்று நினைக்க கூடிய போர்க் காட்சிகளையும், கற்பனைக் காட்சிகளையும் எந்த உறுத்தலும் இல்லாத கிராபிக்ஸ் மூலமாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தக் கூடியவர். பாகுபலி 1, பாகுபலி 2 இரண்டு படங்களிலும் ஆங்காங்கே பொன்னியின் செல்வன் சாயல் வந்து சென்றது. தற்போது வேள்பாரி புத்தகத்தை இயக்குனர் சமுத்திரக்கனி இயக்குனர் ராஜ மௌலியிடம் கொடுக்கப் போவதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். சமுத்திரக்கனியின் ஆசை கூடிய விரைவில் நிறைவேறுமா? வேள்பாரி ராஜ மௌலி இயக்கத்தில் படமாக வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2. ஷங்கர்
பிரம்மாண்டத்துக்குப் பெயர் போனவர். கிராபிக்ஸ் காட்சிகளை அற்புதமாக படமாக்குவதில் பலே கில்லாடி. இந்தியன் படத்தில் சுதந்திர போராட்ட காலகட்டதை அவ்வளவு துல்லியமாக படமாக்கி இருந்தார். ஆதலால் மன்னர் கால கட்டத்தை படமாக்குவதில் அவருக்கு பெரிய சிரமம் ஒன்றும் இருக்கப் போவது இல்லை. ஆனால் படம் எடுக்க கூடிய கால கட்டமும் பொருட் செலவும் எவ்வளவு ஆகும் என்பதை உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுக்க கூடியவர். பொன்னியின் செல்வன் மற்றும் வேள்பாரி போன்ற நாவல்களை மற்ற மொழி இயக்குனர்கள் எடுப்பதைக் காட்டிலும் தமிழில் பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஷங்கர் இயக்க வேண்டும் என்பதே பெரும்பாலோனோரின் ஆசையாக இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பே பத்ம விருது வாங்கி இருக்க வேண்டிய இயக்குனர் கண்டிப்பாக பொன்னியின் செல்வனையோ வேள்பாரியையோ கூடிய விரைவில் படமாக்க வேண்டும்.
3. ஏ எல் விஜய்
மதராசபட்டினம் எனும் அட்டகாசமான படத்தை தந்தவர் ஏஎல் விஜய். இயக்குனர் ஷங்கரை அடுத்து சுதந்திர போராட்ட காலகட்டத்தை அவ்வளவு உணர்வுபூர்வமாக படமாக எடுத்திருந்தார். ஆதலால் இவருக்கு மன்னர் கால படத்தை எடுக்கப் போவதில் அவ்வளவு சிரமம் ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஏஎல் விஜய் தற்போது குமரிக்கண்டம் படம் இயக்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அழகான சினிமா எடுக்க கூடிய விஜய் வேள்பாரி போன்ற நாவலை படமாக எடுக்க முன்வருவாரா?
4. செல்வராகவன்
ரசிகர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளான இயக்குனர். சார் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 எப்ப வரும் ? புதுப்பேட்டை பார்ட் 2 எப்ப வரும் ? என்று டுவிட்டரில் அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் கேள்வி இவை. ஆயிரத்தில் ஒருவன் படத்தை எப்போது பார்த்தாலும் அந்தப் படத்தின் மீதான பிரமிப்பு மட்டும் குறையவே இல்லை. போர்க் காட்சிகளையும் மன்னர் ராஜ்ஜியத்தையும் மன்னர் கால செந்தமிழையும் அவ்வளவு அற்புதமா படமாக்கிய இயக்குனர். பொன்னியின் செல்வனும் வேள்பாரியும் அவருக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகவே தெரிய வாய்ப்புண்டு. ஆதலால் படமாக்குவதில் அவருக்கு பெரிய சிரமம் இருக்க போவதில்லை. இயக்குனர் ஷங்கரைப் போலவே இவரும் எப்பவோ பத்ம விருது பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஏனோ இவருக்கு எல்லாமே தாமதமாகவே கிடைக்கிறது.
5. வசந்த பாலன்
சு. வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலின் ஒரு பகுதியை அரவான் எனும் அட்டகாசமான படமாக உருவாக்கி தந்தவர். ஏற்கனவே எழுத்தாளர் சு. வெங்கடேசனும் இயக்குனர் வசந்தபாலனும் அரவான் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள் என்பதால் இந்தக் கூட்டணி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயில் என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வசந்த பாலன் அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார்? வேள்பாரியை இயக்கப் போகிறாரா? என்ற கேள்விகள் வேள்பாரி முகநூல் பக்கத்தில் அடிக்கடி கேட்கப்படுகிறது.
6. கே எஸ் ரவிக்குமார் & சௌந்தர்யா ரஜினிகாந்த்
கோச்சடையான் படத்தை தந்த கூட்டணி. கதை, திரைக்கதை, வசனம் அனைத்திலும் தீயாக வேலை செய்திருந்த போதிலும் கிராபிக்ஸ் பணி அவ்வளவு பிடிப்பாக இல்லாததால் தோல்வியை கண்டது. அப்படி இருந்த போதிலும் படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட்.
பொன்னியின் செல்வன் நாவல் மீது ரஜினிக்கு மட்டுமல்ல ரஜினி குடும்பத்துக்கு மிகப் பெரிய ஆர்வமுண்டு. சிறு வயதிலிருந்தே தனக்குப் பழக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை படமாக இயக்குவாரா சௌந்தர்யா ரஜினிகாந்த்?
அட்லி, மணி ரத்னம், சுந்தர் சி போன்றோர் மன்னர் காலகட்ட கதையை படமெடுக்க ஆர்வமாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. யார் இயக்கத்தில் பொன்னியின் செல்வனும் வேள்பாரியும் படமாகப் போகிறது?
Be the first to comment on "இவர்களில் “பொன்னியின் செல்வன்” மற்றும் “வேள்பாரி”யை இயக்கப் போவது யார்?"