கடந்த சில வருடங்களாகவே வட சென்னை மக்களைப் பற்றி திரைப்படங்கள் அதிகம் உருவாகி வருவது குறிப்பிடத் தக்கது. அவற்றில் மெட்ராஸ், வட சென்னை, காக்கா முட்டை போன்ற படங்கள் மிக முக்கியமானவை. இந்தப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பவர்களுக்கு கறுப்பர் நகரம் புத்தகம் மிகவும் பிடித்துப் போகும்.
செங்கேணி, ஆராயி, செல்வி, கணேசன், முனியம்மா, செல்லக்கண்ணு, சீதா, சிவா, பாளையம், செந்தாமரை, மருது, வேலு, கோவிந்தம்மா, பேய்க்காளி, மீசைக்காரர், கரி திருடி, மஞ்சலாடைப் பெண், மாவுளி, பீடி கொலுத்தி, வெள்ளதப்பு என்று கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இந்நாவலை நகர்த்திச் செல்கிறது.
ஜெகநாதபுரம் மேட்டுத்தெருவில் குடிசையில் வசித்து வந்த மக்கள் பேய்க்காளியின் சாராயக்கடையால் என்ன தொந்தரவு அடைந்தார்கள்? எப்போதும் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கும் மின் நிலையம், நாய்க் கிடங்கு போன்ற சூழலில் அவர்கள் எப்படி நிம்மதியாக உறங்கினார்கள்? அவர்களுக்கு மெட்ராஸ் பாஷை எப்படி தொத்திக் கொண்டது? மழை பெய்தால் அவர்கள் நிலைமை என்ன ? அம்பேத்கர் பெரியார் மீது எவ்வளவு பற்று வைத்திருந்தார்கள்? நைட் ஸ்கூல் ஏன் தேவைப்பட்டது ? அயோத்தி தாசப் பண்டிதர் மன்றம் ஏன் அடித்து நொறுக்கப்பட்டது ? அவர்கள் ஏன் ராமனை விடுத்து ராவணனை கொண்டாடுகிறார்கள் ? போன்ற பல கேள்விகள் நமக்குள் எழ வைத்து அவற்றிற்கு கதையினூடே பதில் சொல்லி கண்ணை கலங்க வைக்கும் அற்புதமான நாவல் தான் கரன் கார்கி எழுதியுள்ள கறுப்பர் நகரம்.
வட சென்னை மக்கள் என்றாலே ரௌடிகள், கெட்ட வார்த்தை பேசுபவர்கள், படிப்பறிவு இல்லாமல் சுத்த பத்தமில்லாமல் திங்குற இடத்துலயே பேண்டுகொண்டு திரியும் விலங்குகள் போன்ற பலருடைய மேம்போக்கான பார்வையை சில்லு சில்லாக அடித்து நொறுக்கி இங்க இருக்கறவன்லாம் எவ்வளவு மனித நேயத்தோட வாழ்றான் பாரு… என்பதை எடுத்து சொல்லும் நாவல் இது.
350 பக்கங்கள் உடைய இந்த நாவலை நிச்சயமாக நிதானமாகத் தான் படிக்க வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு நாட்களாவது தேவைப்படும். படித்து முடித்ததும் வட சென்னை மக்களுடன் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு வந்ததைப் போன்ற உணர்வு நிச்சயம் நாமக்கு ஏற்படும். ஒரு முறையாவது படித்து விடுங்கள்.
Be the first to comment on "உனக்கு ராவணன் மாதிரி புருசன் கிடைப்பான்! – கறுப்பர் நகரம் புத்தக விமர்சனம்"