2020 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒரே ஆண்டில், ஒரே நாடு நடத்துகிறது என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக எட்டு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை முறையே அடிலெய்டு, பிரிஸ்பேன், கேன்பெரா, கீலோங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகும்.
2015 ஆண்டு நடந்த டி20 கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டம் மெல்போர்ன் நகரத்தில் நடந்தது. இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டங்களை மெல்போர்ன் நகரம் நடத்த இருக்கிறது.
டி20 பெண்கள் கிரிக்கெட் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. டி20 ஆண்கள் கிரிக்கெட் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. பெண்கள் சார்பாக பத்து அணிகளும், ஆண்கள் சார்பாக 16 அணிகளும் போட்டியில் பங்கு கொள்கின்றன.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இது தொடர்பாக பேசும்போது ‘டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் ஆஸ்திரேலியா பெரும் பெருமை கொள்கிறது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் ஆண்களை விடவும் பெண்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் மூன்றுமுறை உலக அளவிலான பட்டங்கள் வென்றுள்ளனர்’ என்று தெரிவித்தார். போட்டிகள் குறித்த முழு விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படுகின்றன.
Be the first to comment on "மெல்போர்னில் நடக்கவிருக்கிறது உலகக் கோப்பை டி20யின் இறுதிப்போட்டி"