பொழுதுபோக்கிற்காக டிவி பார்க்கிறோம் என்பதை மீறி ஒரு சில நிகழ்ச்சிகள் நம் மனதை வெகுவாக கவர்ந்திருக்கும். நேரத்தை பயன் உள்ளதாக மாற்றும். சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கும். விவாதத்தை உண்டாக்க கூடியதாக இருக்கும். பலருடைய மனிதர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள கூடியதாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் கோபிநாத் நடத்தி வரும் நீயா நானா. பல அற்புதமான தலைப்புகளை எடுத்து சாமான்ய மக்களை அழைத்து வந்து பேச வந்து நடத்தப்படும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி. அதே சமயம் டிஆர்பிக்காக சிலரை அழ வைத்து, சிலரை கோபப்பட வைத்து, சிலரை ஆபாசமாக காட்டி நடத்தப்படும் அபத்தமான நிகழ்ச்சியும் கூட. இருப்பினும் அந்த நிகழ்ச்சி பல வருடங்களாக வெற்றிகரமான நிகழ்ச்சியாக அமையக் காரணம் அந்த நிகழ்ச்சியில் செயற்கையை காட்டிலும் இயற்கையும் யதார்த்தமும் சற்று அதிகமாக இருப்பதே.
நீயா நானா மேடையில் :
பெரியவர்கள் சீரியஸாக பேசிக்கொண்டிருக்க குழந்தைகள் எந்த கவலையும் இல்லாமல் எந்தப் பயமும் இல்லாமல் ஓடியாடித் திரிவார்கள். அதே போல பல மாடர்ன் இளைஞர்கள் டவுசரோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து இருந்திருக்கிறார்கள். பல இளைஞிகள் மாடர்ன் உடைகளோடு அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இப்படி யதார்த்தம் நிரம்பிய நிகழ்ச்சியாக இருப்பதாலே நீயா நானா இன்று வரை வெற்றிகரமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.
கரு. பழனியப்பனின் தமிழா தமிழா :
பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், மந்திரப் புன்னகை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் கரு. பழனியப்பன். அவர் இருக்கும் மேடை என்றாலே அந்த மேடை தனிச்சிறப்பு பெறும். அந்த வகையில் அவருடைய பேச்சு இருக்கும். எதையும் மனதில் புதைத்து வைக்காமல் பட்டதை பட் பட்டென்று சொல்லிவிடும் நபர். கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சிக்கு அதிக முறை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நபர்களில் மிக முக்கியமானவர் கரு. பழனியப்பன்.
நியூஸ் சேனல்கள் பலவற்றில் இவர் அடிக்கடி தென்படக் கூடிய மனிதர். யூடுப்பில் கருநீலம் என்ற சேனலில் உரையாற்றக் கூடிய மனிதர். இலக்கிய கூட்டங்களில் வேட்டி சட்டையுடன் தென்படும் மனிதர். இப்படி இவருடைய அடையாளம் பல. தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் மிக முக்கியமானது தமிழா தமிழா நிகழ்ச்சி. புத்தம் புதிய நிகழ்ச்சியான இது நல்ல கவனத்தைப் பெற தொடங்கி உள்ளது.
பிக்பாஸ் போன்ற முட்டாள்தனமான நிகழ்ச்சிகள் எல்லாம் வெற்றியடையும் போது தமிழா தமிழா நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணுகிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
Be the first to comment on "நீயா நானாவுக்குப் போட்டியாக களமிறங்கிய கரு. பழனியப்பனின் தமிழா தமிழா !"