ஹாட்டின்களை அள்ளும் ஹலிதா சமீம்! – சீன் பை சீன் நம்பிக்கையை விதைத்த சில்லுக்கருப்பட்டி!

Sillu Karupatti movie review

தமிழ் சினிமாவில் ஒரு அழகான படம் வந்து… ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை அள்ளிக் கொடுக்கிற மாதிரி ஒரு படம் வந்து… ரொம்ப நாளாச்சுப்பா என்ற ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது.  அவர்களின் மனக்குறையைப் போக்கும் வகையில் “சில்லுக்கருப்பட்டி” என்கிற ஒரு அட்டகாசமான படத்தை தந்தார் ஹலிதா சமீம். முதலில் ஹலீதா சமீம் பற்றி தெரிந்து கொள்வோம். வீட்டிற்கு இரண்டாவது பெண். அவருடைய அம்மா முன்னாள் அதிமுக எம்எல்ஏ. அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமாக கோவையில் ஒரு நர்சிங் கல்லூரி உள்ளது. இப்படி செல்வச்செழிப்பான குடும்பத்தில் இருந்து வந்த போதிலும் எல்லாத்தரப்பு மக்களிடமும் எந்தவித ஈகோவும் இல்லாமல் எளிமையாக நடந்து கொள்ளும்  அன்பு மனிதர் தான் இந்த ஹலித்தா சமீம். 

தனுஷ் எழுதி நடித்த vip-2 படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தின் கிளைமாக்ஸில் கஜோல் ஒரு பெண்ணாக இருந்து சாதிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று கேள்வி எழுப்ப, தனுஷ் அதென்ன ஒரு பெண்ணா? என்று இழுக்கிறீர்கள்…  நீங்களே இப்படி “பெண்ணாக இருந்து…” “பெண்ணாக இருந்து…” என்று அதை அழுத்தமாகச் சொல்லும்போது நீங்கள் எல்லாம் உங்களை நீங்களே தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளி கொள்கிறீர்கள் என்று பதிலளிப்பார் தனுஷ். அதைப் போலத்தான் ஹலீதா சமீம். அவரிடம் சென்று “பெண் இயக்குநராக இருந்து…” ஒரு “பெண்ணாக இருந்து…” எப்படி சாதித்தீர்கள் என்ற கேள்வியை எழுப்பி விட்டால் அது என்ன ஒரு “பெண்…” “பெண்…” என்று குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள். தயவுசெய்து இந்த மாதிரி இனிமேல் கேள்வி கேட்காதீர்கள் என்று பட்டென உடைத்து பேசிவிடுவார். 

சிறு வயது முதலே படுசுட்டி. பத்து வயதாக இருக்கும் போதே இயக்குனர் ஷங்கருக்கும் மணிரத்தினத்திற்கும் கதை எழுதி அனுப்பும் முயற்சியில் இருந்தார்.  சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு என்றபோதிலும் படிப்பிலும் அவர் கெட்டி.  எஸ்ஆர்எம் யூனிவெர்சிட்டியில் எலக்ட்ரானிக் மீடியா படித்த ஹலிதா சமீம்… படிக்கும் காலத்திலேயே இயக்குனர் புஷ்கர் காயத்ரியிடம்  உதவி இயக்குனராக பணியாற்ற தொடங்கினார்.  அதைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனியிடம் சில காலம் பணியாற்றிவிட்டு “பூவரசம்பீப்பி” என்கிற அழகான படத்தை எடுத்தார். அதை தொடர்ந்து, “ஏலே”, “மின்மினி” போன்ற படங்களில் பிஸியாகிவிட, கிடைத்த சிறு இடைவெளியில் எடுத்த படம்தான் சில்லுக் கருப்பட்டி. 

ஹலீதா சமீமின் எழுத்து: 

  1. அழகியல் – வறுமையும் ஏக்கமும்

அகம் தானாய் அறிகிறது என்ற பிரதீப்குமாரின் மென்மையான இசையும் குரலும் கலந்து பாடலோடு தொடர்கிறது சில்லுக் கருப்பட்டி. பறவைப் பார்வையிலிருந்து தொடங்கும் இந்த படத்தின் முதல் காட்சி குப்பைக் கிடங்கை காட்டுகிறது. குப்பையில் இருந்தாலும் வைரம் வைரம் தான் என்பதற்கு ஏற்ப அந்த குப்பையின் உச்சியின் மீது அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறு கிளிகள் குப்பையில் இருக்கும் அழகழகான விஷயங்களை  தங்களிடம் இல்லாத தங்களுக்குத் தேவையான பொருட்களை தனியே பிரித்தெடுக்கும் அன்னப் பறவைகளாக வளர்கிறார்கள். பால் கெட்டு போய் இருந்த போதிலும் தோழி ஆசையாக கொடுக்கிறாள் என்பதற்காக அவள் கொடுத்த டீயைக் குடிக்கிறான் மாஞ்சா. அந்த மாஞ்சாவின் வீட்டிலும் ஹார்டீன்கள் போட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கிறது. மாஞ்சா மரத்தடியில் உட்கார்ந்து இருந்தால் அந்த மரத்தில் உள்ள பச்சை இலைகள் பச்சை ஹார்டின்கள் போல் தெரிகிறது. 

பூந்தொட்டிகள் நடுவே வளரும் கூலிங்கிளாஸ் ப்ளூடூத் ஹெட்போன்களுடன் திரியும் பணக்காரச் சிறுமியின் வீட்டை,  குப்பைத் தொட்டியின் பின்புறமிருந்து மறைவாக பார்க்கிறான் மாஞ்சா. மாஞ்சா குப்பைத் தொட்டியில் தன்னுடைய கனவு காரை ஓவியமாக வரைய நிஜத்தில் அதை விட பெரிய கார் ஒன்று அவன் கண்முன்னே ஊர்ந்து செல்கிறது. மாஞ்சா தொத்திக் கொண்டு செல்லும் அந்த டிப்பர் லாரி, அந்தப் பணக்காரச் சிறுமியின் கையில் விளையாட்டு பொம்மையாக இருக்கிறது. முகிலன் உடன் பணியாற்றும் அவனுடைய சக நண்பர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லும்போது அருகே இருக்கும் வாட்ச்மேன் தானாக எழுந்து வந்தது செல்ஃபிக்கு போஸ் கொடுக்கிறார்.

  1. அழகியல் – புதுமையும் துணிச்சலும்: 

ஆணின் விதைப்பையில் ஏற்படும் பிரச்சினையை இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டியதே இல்லை. ஆண் இயக்குனர்களே இது மாதிரியான காட்சிகளை வைக்கவில்லை என்ற போது ஒரு பெண் இயக்குனர் ஆண்களின் உலகை, ஆண்கள் பேசும் டபுள் மீனிங் வார்த்தைகளை எல்லாம் நன்கு அறிந்து  அதைத் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் வியப்புக்குரியது. விந்தணு கொண்டுவர பிளேபாய் என்ற புத்தகத்தை எடுத்துக் கொடுக்கிறார்கள். இப்படி எல்லாம் ஒரு நோய் இருக்கிறதா இதற்கு இந்த மாதிரி ட்ரீட்மெண்ட் இருக்கிறதா இந்த மாதிரியெல்லாம் செலவாகுமா என்பதெல்லாம் முற்றிலும் புதுமை. இன்னமும் சிறுவர்கள் குப்பைகளில் சுற்றித்திரிகிறார்களா? அவர்களை இந்த உலகம் இன்னமும் புறக்கணித்து கொண்டு கவனிக்காமல் தான் இருக்கிறதா?  சப்ஸ்கிரைப் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க என்ற வார்த்தைகள் நம் காதில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் உலகத்தில் ஒரு நாளில் ஒரு கால் கூட அட்டென்ட் பண்ணி வாழாமல் 50 சதவீத மக்கள் வாழ்கின்றனர் என்கிற செய்தி முற்றிலும் புதுமையாக இருந்தது. குப்பை அள்ளும் சிறுவர்கள்  செல்போன் பற்றி எதுவுமே அறியாமல் இருக்கிறார்கள்  என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல காஸ்ட்யூம் டிசைனர் களின் வாழ்க்கையையும் மீம்ஸ் கிரியேட்டர் இன் வாழ்க்கையையும் இந்த படம்தான் முதலில் பதிவு செய்திருக்கிறது அழகாக. 

நிறைய இளைஞர்களுக்கு சன்னிலியோன் மியா கலிபா போன்ற பாலியல் நடிகையை தான் தெரிந்திருக்கும் ஆனால் இந்த படத்தில்,  Isabella soprano, olivia olovely, austin kincaid, lisa ann, brooklynne james, reshma என்று இளைஞர்களுக்கு தெரியாத பாலியல் நடிகைகளின் பெயர்களை எல்லாம் தன் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சத்தியமா எனக்கு நீ வேணா எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் என்று சிம்புவின் பாடல் ஒலிக்க, முகிலன் மற்றும் அவருடைய காதலி இருவரும் ஒருசேர அண்ணா அந்த பாட்டை மாத்துங்க என்று எரிச்சலோடு சொல்ல டிரைவர் உடனே பவர் பாண்டி படத்திலிருந்து வரும் பாத்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன் என்ற பாடலை வைக்கிறார். 

  1. அழகியல் – நக்கலும் நம்பிக்கையும்: 

கட்டியிருக்கிறவருக்கு எப்படி கட்டி கொடுப்பார்கள் என்று தேன்மிட்டாய் பஞ்ச் அடிப்பது, ஒருபால் நாலும் அடிச்சு நெவுத்துங்க என்று இளம் பெண்களிடம் இருக்கும் ஹியூமர் சென்ஸை அழகாக காட்டியிருக்கிறார். மீம்ஸ் எல்லாம் ஒரு மேட்டரா என்று சொல்லு நாயகி come on இது ஒரு புரட்சி என்று உற்சாகப்படுத்துகிறார்.  மீன்கள் போடுபவர்கள் எப்போதும் ஜாலியாக இருப்பார்கள் என்று நினைக்க அவர்களுடைய வாழ்க்கையும் சார்லி சாப்ளினின் வாழ்க்கையைப் போல  சோகம் நிறைந்த வாழ்க்கையாக இருக்கிறது என்கிறார் அந்த காஸ்ட்யூம் டிசைனர். கறை நல்லது என்று சொல்லி, just kick the cancer, just kick it, அந்தப்பெண். Be a sport, cute போன்ற வார்த்தைகளை அந்தப் பெண் உபயோகிக்கிறார். 

புற்றுநோய் சிகிச்சை முடிந்து கண் விழித்த முகிலனுக்கு HOPE என்ற வார்த்தையை பரிசாக அளிக்கிறார் அந்தப் பெண். அருவி படத்தில் எய்ட்ஸ் வந்த பெண்ணை காதலிப்பார் பீட்டர். அதேபோல இந்த படத்தில் ஒற்றை விதை பை மட்டுமே கொண்ட ஒரு ஆணை ஒரு பெண்  தானாகத் தேடி வந்து காதலை தெரிவிக்கிறார். என் மறு இதயம் கொடுப்பேன் நீ முழிக்கவே என்று சிம்புவின் விண்ணை தாண்டி வருவாயா பாடல்  ஒலிக்க ஹார்ட்டுக்கு கூட ஒரு ஸ்பேர் வச்சிருக்காரு போல என்று கமெண்ட் அடிக்கிறார் முகிலன். கார்நெட்டோ ஐஸ் கிரீமை வச்சி காதல் என்றால் என்ன என்பதை அற்புதமாக விளக்குகிறார் அந்தப் பெண். அண் கண்டிஷனல் லவ் என்ற வார்த்தையை அழகாக விளக்குகிறார் அந்தப் பெண். 

தனக்கு வந்த காதல் கடிதங்களை காதல் ஓவியங்களை அந்தப் பெண் தூக்கிக்கொண்டுபோய் வீச முடிவு செய்ய முயல, ஏது தூக்கி போடுறீங்களா… இதுதாங்க பொக்கிஷம் உங்களை கட்டிக்க போறவன் கிட்ட இங்க பாருடா நான் எவ்வளவு வொர்த்துனு காட்டலாம்.  நாளைக்கு உங்களுக்குள்ள ஏதாவது சண்டைனா இதுதாங்க உங்க வெப்பனே… இதையெல்லாம் சர்டிபிகேட்ஸ், மெடல்ஸ் வைத்திருக்கும் இடங்களில் இந்தக் காதல் பரிசுகளையும் வையுங்கள் என்று முகிலன் சொல்லும் இடம் அழகோ அழகு. 

  1. அழகியல் – குழந்தைமையும் முதுமையும்

முதியவர்களின் காதலை தமிழ் சினிமாவில் ரொம்ப அழகாக காட்டிய படம் என்றால் அது எஸ் யூ அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜெயராம் துளசி ஆகியோர் நடித்த பண்ணையாரும் பத்மினியும் படம்தான். அதில் இடம்பெறும் “எனக்காக பிறந்தாயே எனதழகா” என்ற பாடல் அவ்வளவு  லவ்லியாக இருக்கும். அந்த படத்திற்குப் பிறகும் பவர்பாண்டி படத்திற்குப் பிறகும் முதியவர்களின் காதலை மிக அழகாக காட்டிய படம் என்றால் அது சில்லுக்கருப்பட்டி படம்தான். 

இந்த படத்தில் மொத்தம், வறுமையில் வாடும் குழந்தைகள், ஆங்கிலத்தில் உரையாடிக் கொள்ளும் மாடர்ன் உலக இளசுகள், திருமணமாகி குழந்தைகள் பெற்ற அபார்ட்மென்ட் தம்பதிகள், நரைத்த… முதிர்ந்த… மெத்த படித்த இரண்டு பணக்கார பெரியவர்கள் என்று பொருளாதாரம், கல்வி, உறவு மூன்றையும் மையமாக வைத்து நான்கு படிநிலைகளில் உள்ள மக்களின் வாழ்வியலை கொஞ்சம் கூட கசப்பு உணர்வு இல்லாமல், காமம்… காதல்… அட்ராக்சன்… இவை மூன்றிற்கும் உள்ள புரிதலை  ரொம்ப நுணுக்கமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹலிதா சமீம். 

சில்லுக்கருப்பட்டி படத்தில், “இந்த உலகத்திலேயே நீ தாண்டா எனக்கு ஃபிரெண்டு” என்று சொல்லும் அந்தச் சிறுமி கௌசிதான் ஹலிதா சமீம்! 

சமீபகால இயக்குனர்களில், ஹலீதா சமீமின் வொர்க் ரொம்ப பிடித்து இருக்கிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்காக காத்திருந்து பொறுமையாக படமெடுக்கும் அவருடைய மின்மினி படத்திற்காக நான் காத்திருக்கிறேன் – இயக்குனர் ஷங்கர்

2019 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் விருது பெற்ற “சில்லுக்கருப்பட்டி” படம் இப்போது சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளை அள்ளி வருகிறது. சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள், ஏழை, பணக்காரன் என்று எல்லோரிடமிருந்தும் தொடர்ந்து ஹார்ட்டின்களையும் அள்ளுகிறார் ஹலிதா சமீம்!

Related Articles

நீரஜ் சோப்ரா என்ன சாதி என்று தெரிந்துகொண... நீரஜ் சோப்ரா - இனி இந்தப் பெயரை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கப் போவதில்லை. 2021ம் ஆண்டிற்கான... இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் ...
ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப... இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அருண் மர்வாஹா என்பவர் கைது செய்யப்பட்...
SC பசங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வராத! &#... "இப்பலாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..." என்று கேட்பவர்கள் இருக்கும் இதே காலத்தில் தான் " நீங்க என்ன ஆளுங்க... " என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ந...
ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் ... முதலில் இந்த படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். இவர் கலைஞர் டிவியில் நடைபெறும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்பாளரா...

Be the first to comment on "ஹாட்டின்களை அள்ளும் ஹலிதா சமீம்! – சீன் பை சீன் நம்பிக்கையை விதைத்த சில்லுக்கருப்பட்டி!"

Leave a comment

Your email address will not be published.


*