நாடு முழுக்க நம்மாழ்வார் இயற்கை அங்காடி ஏன் கொண்டு வர வேண்டும்?

Why bring Nammalvar iyarkai angadi across the country_

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பற்றிக் கேட்கும்போது நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் கலைஞர் கருணாநிதி. காரணம் அவர் முதன்முதலில் குளித்தலை தொகுதியில் தான் வேட்பாளராக நின்றார் அப்போது முதலே கரூருக்கு என்று ஒரு தனி சிறப்பு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பின்னோக்கி சென்றால் ஈவேரா பெரியாருக்கும் கரூருக்கும் கூட மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்று சொல்லலாம். 

அதை தொடர்ந்து முனைவர் வா.செ. குழந்தைசாமி என்பவர் கரூரில் இருந்து கிளம்பி ஐஐடி போன்ற பெரிய பெரிய பல்கலைக்கழகங்களில் படித்து கரூருக்கு பெருமை சேர்த்தார்.  அவருடைய பெயரில் கல்வி அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளியில் படித்து சிறப்புற்று விளங்கும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இதேபோல கரூரிலிருந்து கிளம்பி தமிழகம் முழுக்க வளர்ந்து நிற்கும் தொழிலதிபர்களும் இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர் கரூர் வைசியா பேங்க் நிறுவனர்.  கரூரில் சின்னதாக தொடங்கிய தன்னுடைய வங்கியை தமிழகம் முழுக்க பரப்பினார். இப்போது இந்தியாவின் பல பகுதிகளிலும் கரூர் வைசியா பேங்க் தன்னுடைய காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. 

கரூருக்கும் உலகின் பல நாடுகளுக்குமே கூட தொடர்பு இருக்கிறது. தமிழகத்தின் மையப் புள்ளியான கருவூர் என்றழைக்கப்படும் கரூர் தொழில்களில் சிறந்து விளங்குகிறது. அது பெரிய தொழில் குடிசை தொழில் என்று அனைத்து வகை தொழில்களிலும் ஓரளவுக்கு நன்றாகவே சிறப்புற்று விளங்குகிறது.  பஸ் பாடி கட்டுதல், கொசுவலை தயாரித்தல், ஜவுளி உற்பத்தி செய்தல் போன்ற தொழில்களில் பல சாமானிய மக்கள் தொழிலாளர்களாக தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். 

அதேபோல கல்வி நிறுவனங்களும் கரூரில் அதிகரித்து வருகிறது. சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கு மேல்நிலைப்பள்ளி,  குமாரசாமி பொறியியல் கல்லூரி, விஎஸ்பி பொறியியல் கல்லூரி போன்ற  கல்வி நிறுவனங்கள் கரூரில் மிக புகழ்ச்சியுடன் விளங்குகிறது. 

கரூர் என்றாலே அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பணியாளர்களுக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அரவக்குறிச்சி தொகுதி தான்.  ஏனென்றால் தேர்தல் நேரங்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கும் தொகுதி என்றால் அது அரவக்குறிச்சி தொகுதியில் தான். பல வருடங்களுக்கு முன்பு இந்த அரவக்குறிச்சி தொகுதியில் ஒரு கிராமத்து மக்களே ஒன்று திரண்டு சென்று அனைவருமே வேட்பாளராக தங்களை பதிவு செய்து கொண்டனர். அன்று முதல் அரசியல்வாதிகளுக்கு அரவக்குறிச்சி தொகுதி என்றால் கொஞ்சம்  அச்சம் ஆகத்தான் இருக்கிறது. அப்போது முதலே ஓட்டுக்கு பேரம் பேசும் வழக்கத்தை கொண்டு வந்து விட்டனர் இந்த அரசியல்வாதிகள். 

இப்படி எதிரும் புதிருமான மக்கள் வாழும் கரூரில் மிக அழகான ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் அது நம்மாழ்வாரின் மாணவர்கள் நம்மாழ்வாரின் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் “வானகம்” என்ற அமைப்புதான். 

கரூர் என்றாலே அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட மாவட்டமாக மாறி வருகிறது என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.  கரூரில் நாளுக்கு நாள் ரவுடிகளின் தொல்லைகள் ஜாதி வெறி கொலைகள் எல்லாம் அதிகரித்துக் கொண்டே வருகிறது ஆனால் அவை வெளியே தெரியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.  சென்னை வேலூர் போன்ற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் தான் இப்போது அதிகமான வெப்ப நிலை பரவி வருகிறது போன்ற பல குற்றச்சாட்டுகள் கரூர் மீது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இப்படி கரூர் மாவட்டம் ஒரு பக்கம் சிதைந்து கொண்டே இருக்க மறுபக்கம் நம்மாழ்வார் சில வேளாண் கல்வி படித்த இளைஞர்களை நேர்மையான விவசாயிகளை எல்லாம் தன்னுடன் சேர்த்துக்கொண்டு கடவூர் ஜமீனுக்கு சொந்தமான நிலம் ஒன்றை வாங்கி சுண்ணாம்பு நிலமாக இருந்த அந்த நிலத்தை மெல்ல மெல்ல அதை பசுங்காடுகளாக மாற்றினார். 

அந்தப் பசும் காடு வானகம் ஆக மாறியது. அந்த வானகத்திற்கு என்று மூன்று இலக்குகளை உருவாக்கினார் நம்மாழ்வார். நஞ்சில்லா உணவு, மருந்தில்லா மருத்துவம், சுவரில்லா கல்வி  போன்றவை. இவை தான் இந்த நாட்டிற்கு மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. அந்த முக்கியமான தேவைகளை வானகத்தின் இலக்காக வைத்துக் கொண்டு  இளைஞர்களை செயல்பட வைத்தார் நம்மாழ்வார். 

கொழிஞ்சி, புது நிலவு, எழுங்கதிர்,  எதிர்காலம், திருமாலிருஞ்சோலை  போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணைகள் அனைத்தும் நம்மாழ்வாரின் தூண்டுதலால் அவருடைய நம்பிக்கை வார்த்தைகளால் உருவானவை. 

சுனாமியின் போது அந்த பகுதிக்கு சென்று ஏழை எளிய மக்களுக்கு தன்னால் தன்னுடைய பிள்ளைகளால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்த நம்மாழ்வார் அடுத்து தன் பணியை கரூரிலிருந்து செய்ய முடிவு செய்தார்.  எல்லோரும் நல்லவர்கள் எல்லோரிடமும் அன்பை விதைக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்ட காந்தியின் தீவிர பக்தரான நம்மாழ்வார் காந்தியைப் போலவே  ஒரு மையமான பகுதியில் தன்னுடைய  வாழ்வும் வாழ்க்கை சார்ந்த பணிகளும் அமைய வேண்டும் என்று விரும்பினார். இந்தியா முழுக்க சுதந்திர போராட்டத்திற்காக சுற்றி வந்த காந்தி இந்தியாவின் மையமான வார்தா என்ற இடத்தில் தன்னுடைய ஆசிரமத்தை அமைத்தார். அதேபோல நம்மாழ்வார்  தமிழகத்தின் மையமான திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட கரூர் மாவட்டத்தில் இருக்கும் கடவூர் கிராமத்து சுருமான்பட்டி அருகே தன்னுடைய வானகம் என்ற இயற்கை பண்ணையை அமைத்தார். 

மீத்தேன் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நம்மாழ்வாரின் உயிர் இயற்கையோடு இணைந்தது.  டிசம்பர் 30 அன்று மரணமடைந்தார் நம்மாழ்வாரின் உடல் அவருடைய பிறந்த மாவட்டமான தஞ்சாவூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு அவர் ஆசையாக உருவாக்கிய கரூர் மாவட்டத்தில் உள்ள வானகத்திற்கு கொண்டு வந்தனர்.  ஜனவரி 1 2014 புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணிக்கே வானத்தில் அவருடைய உடல் விதைக்கப்பட்டது.  இந்தியாவின் மிக முக்கியமான பொக்கிஷமான வேப்பமரத்தின் காப்புரிமையை வெளிநாட்டினர் ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட போது, அதனை எதிர்த்து போராடிய பல அறிஞர்களில் நம்மாழ்வாரும் ஒருவர். வேப்பமரத்தின் காப்புரிமை நம் நாட்டிற்கு கிடைத்து விட்டது என்றதும் மகிழ்ச்சி அடைந்த நம்மாழ்வாரை செங்கல்பட்டில் பாராட்டிய அவருடைய சிஷ்யர்கள்  அவருக்கு “வேம்பாழ்வார்” என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். 

வேம்பாழ்வாரின் உடல் வானகத்தில் புதைக்கப்பட்ட பிறகு அந்த இடத்தில் ஒரு வேப்பம் கன்று நட்டு வைத்தனர் அவருடைய குடும்பத்தினர். இயக்குநர் சேரன் கடைசியாக இயக்கிய படம் “திருமணம்”. அந்த படத்தில் சுகன்யாவின் தம்பியாக நடித்த தம்பி ராமையாவின் மகன் ஒரு ரேடியோ நிறுவனத்தில் ஆர்ஜேவாகப் பணியாற்றி வருவார். அவர் சில நாட்களில் இந்த பணியை நிறுத்த போவதாக அவர் சுயமாக ஏதாவது தொழில் செய்யலாம் என்று விரும்புவார். அப்போது அவருக்கு அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்யலாம் என்று தோன்ற அவர் முறையான விவசாயம் செய்து கொண்டிருக்கும் ஒரு பண்ணைக்கு சென்று விவசாயம் எப்படி செய்வது என்பது குறித்த பயிற்சி எடுத்துக் கொள்வார். அதுபோல நிஜத்திலும் உலகில் இருந்து பல இளைஞர்கள் தமிழகத்திலிருந்து பல இளைஞர்கள் என்று  இளமை படை நம்மாழ்வாரின் பண்ணைகளுக்கு தேடி வந்து இயற்கை விவசாயம் எப்படி செய்வது என்று பயிற்சி பெற்று “உயிர்வாழ் விவசாயம்” என்ற சான்றிதழுடன் விவசாயம் செய்ய தொடங்குகின்றனர். 

மௌனகுரு பட புகழ் இயக்குனர் சாந்தகுமார் எட்டு ஆண்டுகள் கழித்து உருவாக்கிய படம் மகாமுனி. இந்த படத்தில் இரண்டு ஆர்யாக்கள் நடித்திருப்பார்கள். அதில் மகாதேவன் ஒரு கதாபாத்திரம் முனிராஜ் ஒரு கதாபாத்திரம். இதில் நாம் கவனிக்க வேண்டியது முனிராஜ் என்ற கதாபாத்திரம். ஈரோடு மாவட்டம் “மேக்கரை” என்ற பகுதியில் வசித்து வருபவராக இருக்கிறார் இந்த முனிராஜ்.  விவேகானந்தரின் பிரம்மச்சாரியம் வள்ளலாரின் ஜீவகாருண்யம் போன்ற கொள்கைகளை பின்பற்ற கூடிய இந்த முனிராஜ், ஜாதி மதப் பற்று எதுவுமில்லாமல்  இயற்கையை நேசிக்கும் ஒரு பரிசுத்தமான மனிதனாக வாழ முயற்சிக்கிறார்.  ஜாதி மதம் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல் மாணவர்களுக்கு உலக திரைப்படங்களை போட்டு காட்டுதல், உலக இலக்கியங்களை எடுத்துச் சொல்லி புரிய வைத்தல், இயற்கையின் அழகை இயற்கையின் தேவையை புரிய வைத்தல், விதைப்பந்து தூவுதல் போன்ற நற்காரியங்களை தன்னுடைய முழு நேர சேவையாக செய்து வருகிறார் முனிராஜ்.

இதுமட்டுமின்றி 70% மனிதருக்கும் 30 சதவீதம் புழு, பூச்சி, பறவைகளுக்கும் பங்கீடு என்ற முறையில் இயற்கை விவசாயம் செய்து வரும் இந்த முனிராஜ் நிஜ உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மாழ்வாரின் சிஷ்ய பிள்ளைகளை நினைவூட்டுகிறார். இப்படி காந்தியைப் போல பெரியாரைப் போல நம்மாழ்வாரும் இந்தியா முழுக்க ஒரு இளைஞர் படையை திரட்டி வைத்திருக்கிறார்.  அவர்களில் பலர் நம்மாழ்வாரின் முன்னோடியான காந்தியின்  கதராடை கொள்கையை நாடு முழுக்கப் பரப்பும் திட்டத்துடன்,  மலைவாழ் பகுதிகள், குக்கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி என்ற முறையில் சுவரில்லா கல்வியை நாடு முழுக்க பரப்பும் திட்டத்துடன், நஞ்சில்லா உணவை நாடு முழுக்கப் பரப்ப வேண்டும் என்ற நம்மாழ்வார் இயற்கை அங்காடியை நாடு முழுக்க பரப்பும் திட்டத்துடன் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.  அவர்களின் முயற்சியை எந்தவிதத்திலும் தோற்றுப் போகவில்லை. கரூர் ஈரோடு திண்டுக்கல் நாமக்கல் போன்ற பகுதிகளில் நிறைய இயற்கை அங்காடிகள் முளைத்திருக்கின்றன.  நம்மாழ்வாரின் இந்த சிஷ்ய பிள்ளைகளின் முயற்சியால் விவசாயிகளுக்கும் விற்பனையாளர்க்கும் இடையே இருக்கும் அந்த இடைத்தரகர் என்ற முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது.  இவர்களின் இந்த இயற்கை அங்காடிகள் இருக்கும் பொருட்கள் முழுக்க முழுக்க அவர்களுடைய தோட்டத்திலிருந்து வயல்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள். இங்கு வேதி மருந்துகள் பூச்சிக்கொல்லிகள் போன்றவைகளுக்கு வேலையே இல்லை. 

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் கலப்பட உணவுகள் குறித்து நிறைய பேசி இருப்பார்கள். அதில் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து ரொம்பத் தெளிவாக விளக்கி இருப்பார்கள். அந்த படத்தில் காட்டியது போல் உங்களுடைய குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் தயவு செய்து இந்த மாதிரியான இயற்கை அங்காடிகளை ஆதரியுங்கள்.  குழந்தைகளின் வாயை கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் ஆசைப்பட்டதை அடம்பிடித்து வாங்கிக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்கிறது. சரி அதை விட்டுவிடுவோம் பெண்கள் அதாவது தாய்மார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டால் அவர்களும் இந்த விரைவு உணவைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். 

இதனால் மாதவிலக்கு பிரச்சனை ஏற்படுகிறது, மாதவிலக்கு சரியான நாளில் வராமல் இருத்தல் தள்ளிப்போதல் அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மாதிரியான பீட்சா பர்க்கர்… ஊசி போட்ட பழங்கள், ரசாயன வேதி மருந்துகள் நிறைந்த குளிர்பானங்கள் போன்றவை மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் தடுக்க இயற்கை முறையில் உருவாகும் பனம் பழச்சாறு, நாட்டுச்சர்க்கரை, மலைத்தேன்கள், பழங்கள், கரும்புசாறு,  நாட்டு செக்கு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இது நமக்காக நாம் செய்யும் கடமை என்பதை காட்டிலும் நம் சந்ததிக்காக நாம் செய்யும் கடமை.

Related Articles

எம்.எம். தீன் எழுதிய “யாசகம்”... "தாயிடம் பாசப் பிச்சை தந்தையிடம் அறிவுப் பிச்சை குருவிடம் ஞானப் பிச்சை மனைவியிடம் இச்சைப் பிச்சை... பிள்ளைகளிடம் உறவுப் பிச்சை முதலாளியிடம் வாழ்வுப் ப...
ப. திருமாவேலன் எழுதிய பெரியோர்களே தாய்மா... அறச்சீற்றம் கொண்ட இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் " பெரியோர்களே தாய்மார்களே!" - பெரியோர்களே தாய்மார்களே பு...
ஜெயகாந்தனின் ” ஒரு மனிதன் ஒரு வீடு... கதாபாத்திரங்கள் : டிரைவர் துரைக்கண்ணு, தேவராஜன் -  கிருஷ்ணராஜபுரத்து ஆசிரியர், கிளீனர் பாண்டு, ஹென்றி, சின்னான் - கிருஷ்ணராஜபுரத்த...
நான்கு முறை தங்கம் வென்ற மாரத்தான் வீராங... தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இது போன்ற உலக அள...

Be the first to comment on "நாடு முழுக்க நம்மாழ்வார் இயற்கை அங்காடி ஏன் கொண்டு வர வேண்டும்?"

Leave a comment

Your email address will not be published.


*