பந்தி பரிமாறுவார்கள் எவ்வளவு முக்கியமானவர்கள்? – விசேஷ வீடுகளில் நடக்கும் சங்கடங்கள் ஒரு பார்வை! 

ஆரம்ப காலங்களில் விசேஷ வீடுகளில் பந்தி என்பது தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல் இருக்கும். அப்போதெல்லாம் மண்தரையில் சாணி மொளங்கில் அமர்ந்து சாப்பிடுவதற்கு சிரமமாக இருக்கிறது என்பதால் விருந்துக்கென்றே தனியாக தரை விரிப்பு  பாய்களும் சேலைகளும் பயன்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து பலரும் மர நாற்காலியில் உட்கார தொடங்கிய பிறகு அறிமுகமானது பெஞ்ச். குறிப்பாக சின்ன சின்ன ஹோட்டல்களில் டீக்கடைகளில் பெஞ்சை கொண்டு வந்தனர்.  அப்போது சாப்பாடு பரிமாறும் இடங்களிலெல்லாம் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிடுவது குதுகலமான விஷயமாகவும் கௌரவமான விஷயமாகவும் பார்க்கப்பட்டது. 

இப்படி நாற்காலிகளும் பெஞ்ச்களும் ஹோட்டல்களில் டீக்கடைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வர அவற்றையே வீட்டு விசேஷங்களிலும் மக்கள் பயன்படுத்த தொடங்கினர்.  ஹோட்டல்களில் பார்த்து அப்படியே வீட்டு விசேஷங்களுக்கு பழக்கப்படுத்திய நம் மக்கள் இவ்வளவு நாட்கள் வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு விருந்து கொடுத்தது போல் இல்லாமல் ஹோட்டலில் பரிமாறும் சர்வர் போல பந்தி பரிமாற ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்ததாக வீடுகளில் விசேஷம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் திருமண மண்டபங்களை நோக்கி படை எடுத்து சென்றனர். திருமண மண்டபம் என்றால் நிறைய இடவசதி  கிடைக்கும் விசேஷத்திற்கு வருபவர்களுக்கு நல்ல முறையில் விருந்து கொடுத்து உபசரிக்கலாம் என்ற நோக்கத்துடன் அவர்கள் திருமண மண்டபங்களை நோக்கி சென்றனர். 

இப்படி திருமண மண்டபங்களுக்கு வீட்டு விசேஷங்கள் சென்ற பிறகு தான் இந்தப் பந்தி பரிமாறுதலில் நிறைய பிரச்சினைகள் வருகின்றன. திருமண மண்டபம் என்று வந்துவிட்ட பிறகு அங்கு வரும் உறவினர்கள் இது நம் வீட்டு விசேஷம் என்று மன நிலையுடன் ஓடி ஆடி வேலை செய்யத் தவறிவிடுகின்றனர். அப்படியே சில உறவினர்கள் கால்கள் வலிக்க வலிக்க கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் தொடர்ந்து நடந்து பந்தி பரிமாறுதல் செய்தால்  அவர்களுக்கு சரியான சப்போர்ட் கிடைப்பதில்லை. அதான் இவங்க பாத்துக்கிறாங்க அல்ல, அப்புறம் எதுக்கு நாம போய் மறுபடியும் வேலை செஞ்சுகிட்டு என்று பலர் ஒதுங்கி விடுகின்றனர்.  இப்படி உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்க சில உறவினர்கள் ஆர்வமாகப் பந்தி பரிமாறுகிறார்கள். ஆனால் பந்தியில் அமர்ந்து சாப்பிடும் நெருங்கிய உறவினர்களை பார்க்கும் போது அவர்களிடம் நலம் விசாரித்து பேச தொடங்கி அப்படியே மணிக்கணக்கில் அரட்டை அடிக்க தொடங்கி விடுகிறார்கள். இதனால் மற்ற இலைகளுக்கெல்லாம் சரியாக சாப்பாடு போய் சேராது. அவர்கள் வெறும் இலையை விரித்து வைத்து விட்டு, “எப்ப நீங்க சாப்பிடறதுக்கு வைப்பீங்க… “என்ற கேள்வியை சத்தம்போட்டு எழுப்புவார்கள். 

இப்படி உறவினர்கள் பந்தி பரிமாறுவதால் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதால், பந்தி பரிமாறுவதற்கென்றே தனியாக சில நபர்களை நியமிக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம் மக்களுக்கு வந்தது. அதுக்கு தகுந்த மாதிரி சில இளைஞர்களும் நாங்கள் பந்தி பரிமாறும் வேலையை செய்வோம் என்று திருமண மண்டபங்கள் உரிமையாளர்களிடம் பேசி வைத்திருக்கிறார்கள். அல்லது திருமண மண்டப உரிமையாளர்களே அந்த மாதிரியான பந்தி பரிமாறும் இளைஞர்களை தேடிப் பிடித்து ஒரு குழுவாக வைத்திருக்கிறார்கள். இப்படியே பந்தி பரிமாறும் இளைஞர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் அந்த ஊரின் கீழத் தெரு இளைஞர்களும் கலை கல்லூரிகளில் படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலையாக பந்தி பரிமாறும் வேலை செய்யும் இளைஞர்களும் தான். விசேஷ வீட்டுக்காரர்கள் அந்த மாதிரியான பந்தி பரிமாறும் இளைஞர்களிடம் பந்தி தொடங்குவதற்கு முன்பே எந்தெந்த உணவுப் பொருளை முதலில் வைக்க வேண்டும் எந்தெந்த உணவுகளை எவ்வளவு அளவு வைக்க வேண்டும் என்று சொல்லி தந்து விடுகின்றனர். அதனை சரியாகப் புரிந்துகொண்டு இளைஞர்கள் பந்தி பரபரப்பாக இருக்கும் அந்த குறிப்பிட்ட மூன்று மணி நேரங்களுக்குள் ஓடி ஓடி வேலை செய்து பந்தி பரிமாறி விருந்துக்கு வந்தவர்களை மன திருப்தியுடன் அனுப்பி வைக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லா விருந்தினர்களும் சாப்பிட்டு விட்டார்கள் என்றால் இனி வருபவர்களை  எல்லாம் விசேஷ வீட்டுக்காரர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று கடைசியில் மிஞ்சி இருக்கும் சாப்பாடுகளை சாப்பிட்டுவிட்டு பேசிய தொகையை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் அந்த பந்தி பரிமாறும் இளைஞர்கள். ஆனால் இப்படி காலத்திற்கேற்ற மாற்றம் செய்யாமல் சிலர் பணத்தை மிச்சம் செய்கிறேன் என்கிற பெயரில் பந்தி பரிமாறுவதற்கு ஆட்களை அழைக்காமலேயே இருப்பார்கள். எல்லாம் நம்ம சொந்த பந்தம் பார்த்துக்கும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு இருப்பார்கள்.  ஆனால் சொந்த பந்தங்களில் பந்தி பரிமாறுபவர்களில் சிலர் முதல் சில நிமிடங்கள் பந்தி பரிமாறி விட்டு பிறகு வேலைக்கு கிளம்பனும் நேரம் ஆயிற்று என்பதுபோல் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இப்போது இன்னொரு ஆளை போய் பரிமாறுவதற்கு தேடிப்பிடிக்க வேண்டும். 

இப்படி பந்தி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், பரிமாறுவதற்கு ஆட்களை அங்குமிங்கும் என்று தேடிக் கொண்டு திரிந்தால் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் எப்படி பசியாற சாப்பிடுவார்கள்.  அதற்குள் பந்தியில் அமர்ந்து இருப்பவர்களின் பின்னாடியே நிறைய பேர் வந்து நின்று கொள்வார்கள். இப்போது பந்தியில் அமர்ந்து இருப்பவர்கள் பின்னாடி இருப்பவர்களைப் பார்த்து விட்டு சரியாக சாப்பிடாமல் ஆசையாக இருந்த போதிலும் கேட்டு வாங்க முடியாமல் அரை வயிற்றுடன் இலையை மூடி வைத்து விட்டு கிளம்பி விடுகின்றனர். இப்படியே தான் நிறைய வீட்டு விசேஷங்களில் நிறைய உறவினர்கள் சரியாக சாப்பிடாமல் பாதியில் எழுந்து செல்கின்றனர். அல்லது சாப்பிட முடியாமல் சாப்பாட்டு பொருளை அப்படியே வைத்து விட்டு செல்கின்றனர். இது பலருக்கு பசி என்கிற பிரச்சனையையும் உருவாக்குகிறது. அதாவது முறைப்படி அழைப்பை ஏற்று வந்த விருந்தினர்களும் அந்த சாப்பாட்டை சாப்பிடுவதில்லை.  அதற்குப் பிறகு அந்த சாப்பாட்டை மற்றவர்களும் சாப்பிட விரும்பவதில்லை. அதனால் பெரும்பாலான சாப்பாடுகள் குப்பைத்தொட்டிக்குப் போகின்றன. இவற்றையெல்லாம் விட பந்தியில் நிறைய சாப்பாடுகள் வீண் ஆவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது சாப்பாட்டு நேரத்தை சரியான நேரத்தில் தொடங்காமல் இருப்பது. ஒரு சில விசேஷ வீடுகளில் முறையை சரியாக செய்யக் கூடிய தாய்மாமன்கள் அண்ணன்கள் போன்றோர் வந்த பிறகு தான் சாப்பாடு  பரிமாறுவதை தொடர வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விடுவார்கள். ஆனால் அப்படி முக்கியமாக வந்து அந்த சம்பரதாயத்தை செய்ய வேண்டிய நபர், விசேஷ வீட்டில் பல மனிதர்கள் நம்மால் பசியுடன் காத்திருக்கிறார்கள் என்ற அக்கறை கொஞ்சமும் இல்லாமல் அசால்டாக ஊரைச் சுற்றிக் கொண்டு வருவார். அந்த விசேஷ வீட்டிற்கு வந்திருப்பவர்களில் எத்தனை பேர் வயதானவர்களாக இருப்பார்கள்? எத்தனை பேர் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்கிற விதியை பின் பெற்றவர்களாக இருப்பார்கள்? அதைவிட வேலை நாட்களில் இந்த மாதிரி விருந்து விசேஷம் வைத்து விட்டால் கண்டிப்பாக சரியான நேரத்துக்கு சாப்பாடு பரிமாறியே ஆக வேண்டும். 

அப்படி சரியான நேரத்தில் சாப்பாடு பரிமாற தொடங்கவில்லை என்றால் எவ்வளவு இளைஞர்கள் பந்தி பரிமாறும் வேலையை செய்தாலும் விருந்துக்கு வந்திருப்பவர்கள் கண்டிப்பாக நிம்மதியாக சாப்பிட மாட்டார்கள். காரணம் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிடும் இடத்தை சுற்றி மக்கள் கும்பலாக கூடி இருப்பார்கள்.  கும்பலுக்குள் போய் அடித்து பிடித்துக்கொண்டு சாப்பாட்டுக்காக அலைந்து திரிவதை போல் நிற்பதற்கு பல உறவினர்கள் சங்கடப் பட்டுக் கொண்டு சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். இன்னும் சிலர் வந்த கடமைக்கு கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு மறு சோறு கூட வாங்கி சாப்பிடாமல் கிளம்பி விடுகின்றனர். இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் பந்தி பரிமாறும் இளைஞர்கள் தடுமாறி விடுகிறார்கள். ஒரு சில பெஞ்சுகளில் இலை விரிக்காமல் இருக்கும். இன்னும் சில பெஞ்சுகளில் இலை விரித்து தண்ணீர் போடாமல் இருக்கும். தண்ணீர் தெளிக்காத நிலையில், இளைஞர்கள் அவசரத்தில் கொண்டுபோய் வடையை கேசரியை வைப்பார்கள். அப்பொழுது பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் “எத மொதல்ல வைக்கனும்ங்கற அறிவுகூட இல்லை” என்று திட்டுவார்கள். யாரோ செய்த தவறுக்கு அந்த இளைஞர்கள் திட்டு வாங்கி கொண்டிருப்பார்கள். சரியான நேரத்திற்கு விருந்தை ஆரம்பித்திருந்தால் இவ்வளவு குளறுபடிகள் வந்திருக்குமா? அது மட்டுமன்றி இன்றைய காலகட்டத்திற்குத் தகுந்தபடி தலை முடி வெட்டி இருக்கும் அந்த இளைஞர்களின் தலையைப் பார்த்து “பந்திக்கு வேலை செய்ற ஆளுங்களையும் மண்டையும் பாரு”  என்று கமெண்ட் அடிப்பார்கள்.  என்ன தான் காசுக்காக வேலை செய்தாலும் இந்த மாதிரியான கமெண்ட்டுகளை கேட்கும்போது அந்த இளைஞர்களுக்கு எப்படி இருக்கும்? 

இந்த மாதிரி பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் பந்தி பரிமாறும் இளைஞர்கள் எல்லாம் கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள், அதனால் அவர்கள் சாப்பாடு பரிமாறினால் உள்ளூர்கார பெண்மணிகள், சொந்தகாரர்கள் சரியாக சாப்பிடாமல் முகம் சுளித்துக் கொண்டு பாதியில் எழுந்து விடுவார்கள் என்கிற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு பந்தி பரிமாறும் இளைஞர்களை வேலைக்கு அழைக்காமல் இருப்பார்கள். கீழ் ஜாதி காரன் சாப்பாடு போட்டால் சாப்பிட மாட்டேன் என்று சொல்லும் அவர்களுக்கு  அவர்களுடைய ஜாதியை சேர்ந்த மனிதர்கள் மட்டும் சரியாக பந்தி பரிமாறுகிறார்களா? என்று பார்த்தால், அவர்கள் அந்த உறவினருடன் அரட்டை அடிக்க திடீரென்று போனை எடுத்துக் கொண்டு போய் போன் பேச என்று இப்படி பந்தியில் முழு கவனமும் செலுத்தாமல் இடையிடையே சென்று வருவதால் எல்லோருக்கும் சரியான நேரத்தில் சரியான சாப்பாடு கிடைக்காமல் அப்போதும் சாப்பாடு மிச்சமாக தான் செய்கிறது. 

ஆனால் ஒரு சிலர் இந்த மாதிரி விசேஷங்களில் காசு பார்க்க கூடாது என்று உறுதியாக இருக்கிறார்கள். எந்த எந்த வேலைக்கு யார் யாரை நியமிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். சைவம் சாப்பிடுபவர்கள் என்றால் அவர்களுக்கு தனியே பெஞ்ச்  அடுக்கி வைத்திருக்கிறார்கள், அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் அவர்களுக்கு தனியே சாப்பிடும் இடத்தை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். பந்திக்கு சாப்பிட வருவதற்கு முன் பந்தி பரிமாறும் இளைஞர்களிடம் எப்படி எப்படி பரிமாற வேண்டும் என்பதை மிகத் தெளிவாக சொல்லி விடுகிறார்கள். பந்தி தொடங்கியது முதல் முடிவு வரை எந்தெந்த இலையில் சாப்பாடு கம்மியாக இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவே தனியாக ஒரு ஆள் நியமித்து பார்த்து பார்த்து சாப்பாடு பரிமாறி எந்த சாப்பாட்டையும் அதிக அளவில் மிச்சம் செய்யாமல் சரியாக கணக்கிட்டு விசேஷம் நடத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மனிதர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள் என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். 

Related Articles

அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம்! எதிர... எதிர்ப்பு தான் மூலதனம் அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம் என்று ரஜினி சொன்னதும் சொன்னார் எக்கசக்க எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. ரசிகர்களுடன் புகைப்...
100 தமிழ் சினிமா பிரபலங்களின் சம்பள விவர... இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் இயக்குனர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரின் சம்பள விவரங்கள் அனைத்தும் 2019ம் ஆண்டிற்கு உ...
“அறம் நீ பழகு! அதுதான் அழகு!”... மெட்ரோ எனும் அருமையான படத்தை தந்த இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் இரண்டாவது படம் "கோடியில் ஒருவன்". ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் தான் மிக முக்கியமான ப...
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு யுபிஎஸ்சி ... கடந்த ஞாயிற்றுக்கிழமை 12000க்கும்  மேற்பட்ட யுபிஎஸ்சி தேர்வர்கள் தங்களுக்கான முதல்நிலை தேர்வுகளை விஜயவாடா நகரில் ஒதுக்கப்பட்டிருந்த 27 தேர்வு  மையங்கள...

Be the first to comment on "பந்தி பரிமாறுவார்கள் எவ்வளவு முக்கியமானவர்கள்? – விசேஷ வீடுகளில் நடக்கும் சங்கடங்கள் ஒரு பார்வை! "

Leave a comment

Your email address will not be published.


*