ராசிபுரம் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நிலைமை என்ன? அங்கு என்னென்ன கொடுமைகள் நடக்கும்? 

“ராசிபுரம்” இந்த ஊர் பெயரை கேட்டாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது “டாக்டருக்கு படிக்க வைக்கும் தனியார் பள்ளிகள் நிரம்பியுள்ள ஊர்/படிப்பு சொல்லி தரேன் என்ற பெயரில் பணம் கொள்ளை அடிக்கும் ஊர்” என்பதுதான். 

கரூர் மற்றும் நாமக்கல். இந்த இரண்டு மாவட்டங்களிலும் தான் “டாக்டருக்கு படிக்க வைக்கும்… பணம் கொள்ளை அடிக்கும்… இந்த தனியார் பள்ளிகள்” நிரம்பி உள்ளன. இந்த மாதிரியான பள்ளிகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று உறவுமுறை கொண்ட கூட்டாளிகள் நடத்தும் பள்ளிகள். இன்றைக்கு அமைதியாக இயங்கி வரும் இந்த பள்ளிகள்தான் ஒரு காலத்தில் ப்ளஸ் டூவில் மாநில அளவில் இடம்பிடித்து அதை விளம்பரம் செய்து பணம் கொள்ளை அடித்தன. இன்றைக்கும் “நீட் கோச்சிங் உள்ள பள்ளிகள்” என்ற பெயரில் பணம் கொள்ளை அடித்து வருகின்றன. ஆனால் அது பெரிதாக பிரச்சினை ஆகாத அளவுக்கு பார்த்துக் கொள்கிறது நிர்வாகம். 

பள்ளி கல்லூரி விளம்பரங்களில் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை பயன்படுத்த கூடாது என்று அரசு உத்தரவிட்ட பிறகும் நிறைய நாளிதழ்களில் அதிகம் மார்க் எடுத்த மாணவ மாணவிகளின் புகைப்படங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தும் திமிரும் தெனாவட்டும் உள்ள பள்ளிகள் தான் இந்த கரூர் நாமக்கல் பள்ளிகள். 

முதலில் இந்தப் பள்ளிகளை நடத்துபவர்கள் யார் என்று பார்ப்போம். இந்தப் பள்ளிகளை நடத்துபவர்கள் அரசியல்வாதிகளோ மதவாதிகளோ கிடையாது. இந்தப் பள்ளிகள் நடத்தும் அத்தனை பேரும் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். அல்லது விஆர்எஸ் வாங்கியவர்கள். அவர்கள் தான் இந்தப் பள்ளிகளின் டைரக்டர்கள். அவர்கள் சம்பளம் அரசாங்கத்திடம் இருந்து வாங்கினாலும் அரசுப்பள்ளிகளை, அரசுப்பள்ளி மாணவர்களை ஏளனமாக பார்ப்பவர்கள், பேசுபவர்கள். 

இந்தப் பள்ளியில் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களில் இருந்தும் வந்து மாணவ மாணவிகள் தங்கி படிப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் “டாக்டர்” என்பதே குறிக்கோளாக இருக்கும். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் எல்லோரும் பத்தாம் வகுப்பில் 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். அதற்கும் கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு சீட் கிடையாது. இப்படி 400க்கும் மேல் மதிப்பெண் வாங்கிய நன்றாக படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் சேர்த்துக் கொள்வார்கள். ப்ளஸ் டூவில் அந்தப் பள்ளியின் 99% மாணவர்கள் 1000க்கும் அதிகமான மதிப்பெண்கள் தாமாகவே பெறுவார்கள். இதில் பள்ளிக்கூடம் எதோ கஷ்டப்பட்டு அவர்களுக்கு உதவியதுபோல அவர்களின் புகைப்படங்களை எல்லா நாளிதழ்களிலும் பப்ளிஷ் செய்து விளம்பரம் தேடிக் கொள்வார்கள். 

இந்த மாதிரியான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிம்மதியான உறக்கமும்… அமைதியான… எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்ளும் மனநிலையும் இருக்காது. தினமும் ஸ்லிப் டெஸ்ட் நடக்கும். அந்த ஸ்லிப் டெஸ்ட் பேப்பர்களை திருத்துவதற்கென்றே தனியாக மாதம் மூவாயிரம் சம்பளத்துக்கு சில ஆசிரியர் – ஆசிரியைகள் வேலை செய்கிறார்கள். மாணவர்கள் எந்த அளவுக்கு மன உளைச்சல் அடைகிறார்களோ அதே அளவுக்கு ஆசிரியர்களின் வாழ்க்கையும் அந்தப் பள்ளிகளினால் பாதிக்கப்படுகிறது. 

காலை நான்கு மணிக்கு ஹாஸ்டலில் இருக்கும் எல்லாரும் எழுந்திருக்க வேண்டும். அப்படி எழுந்திருக்கவில்லை என்றால் ரேடியோவில் விதவிதமாக பாட்டு போட்டு தூக்கத்தை கெடுத்து வார்டன் தடியடி நடத்தி எழுந்திருக்க வைப்பார். ஹாஸ்டலில் தங்கி இருக்கும் பாட ஆசிரியர்கள் தான் ஸ்டடி இன்சார்ஜ்கள். காலை ஐந்து மணிக்கு (காலை நான்கு மணிக்கு தொடங்கி இரவு பதினொரு மணி வரை தொடர்ந்து படிப்பு… படிப்பு… படிப்பு மட்டுமே…) மாணவர்களை அவர் தான் ஸ்டடி ஹாலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கொஞ்சம் தாமதமானாலோ, அல்லது ஸ்டடி நேரத்தில் மாணவர்கள் தப்பித்தவறி லேசாக கண் அயர்ந்தாலோ ஆசிரியரின் வேலை பறிபோகும். அப்படி வேலை இழக்கும் ஆசிரியர்களுக்கு மற்றும் வேறு பள்ளிகளுக்கு மாற விரும்பும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு ஒரிஜினல் சான்றிதழ்களை வழங்காமல் அலைய விடுவார்கள் பள்ளி டைரக்டர்கள். நிறைய ஆசிரியர்கள் ஆசிரியைகள் சான்றிதழ்களை வாங்க கோர்ட் கேஸ் என்று அலைந்துள்ளதை பார்த்துள்ளேன். 

இந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்குள் பெரும் ஈகோ போட்டி நடைபெறும். குறிப்பாக பிடி வாத்தியார்களுக்குள். அந்த ஈகோவை கிளப்புபவர்கள் அரசுப்பள்ளியில் பணியாற்றிய டைரக்டர்கள். “என்ன உனக்கு எவனும் பயப்பட மாட்டிங்குறான்…” என்று மட்டம்தட்ட… பிடி வாத்தியார்களுக்குள் ஈகோ கிளம்பி எழும். மாணவர்கள் யாருக்கு அதிகம் பயப்படுகிறார்கள் என்பதை நிரூபிக்க பிடி வாத்தியார்கள் மாணவர்களை சகட்டுமேனிக்கு அடித்து வெளுத்துவார்கள். அதேபோல ஆசிரியருக்கும் அடி விழுந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அரசியல்வாதியின் மகனை அடித்த வாத்தியார் ஒருவரை தனியறை ஒன்றிற்குள் விட்டு வெளுத்து வாங்கியது ரவுடி கும்பல். பள்ளி நிர்வாகமோ எங்களுக்கும் அந்த வாத்தியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கி நின்றது. 

மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரை தினமும் ஸ்பெசல் பாடவேளை நடக்கும். அந்தப் பாடவேளைக்கு சிறப்பு ஆசிரியர்களாக அந்தப் பள்ளியின் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் பணியாற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை அழைத்து வருவார்கள். அவர்களும் தாங்கள் பணியாற்றும் அரசுப்பள்ளியை ஏளனமாகவும் அரசுப்பள்ளி மாணவர்களை இளக்காரமாகவும் பேசுவார்கள். அந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்டால் இந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பம்முவார்கள். இந்த மாதிரி தனியார் பள்ளிகளுக்கு நன்றாக படிக்கும் அரசுப்பள்ளி/அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை சேர்த்துவிடுவதற்கு சில ஏஜன்ட்கள் இருக்கிறார்கள். அந்த ஏஜன்ட்கள் வேறு யாருமில்லை, இந்த தனியார் பள்ளிகளின் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான் அவர்கள். 

தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாட ஆசிரியர் ஆசிரியைகளுக்கு இந்தப் பள்ளிகளில் அவ்வளவாக மதிப்பிருக்காது. குறிப்பாக தமிழுக்கு மதிப்பே இருக்காது. எதாவது விழா நாள் என்றால் மட்டும் தமிழ் ஆசிரியரிடம் வந்து ஐயா… ஐயா… என்று வழிவார்கள். எந்த ஒரு சமூகத்தில் தாய் மொழிக்கு மதிப்பு இல்லையோ அந்த சமூகம் உருப்படாது. தமிழ் ஆசிரியர்களை மதிக்காத அந்த தனியார் பள்ளி மாணவ மாணவிகள் இன்று டாக்டர் இன்ஜினியர் ஆனாலும் வெறுமனே பணம் சம்பாதிக்கும் அறமற்ற மிஷின்களாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பொய் சொல்வதிலோ புறணி பேசுவதிலோ எந்த கூச்சமும் இல்லை. நேர்மை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பார்கள். அந்த மாதிரி ஆட்களை தான் இந்தப் பள்ளிகள் இந்த சமூகத்திற்கு தயார் செய்து அனுப்புகின்றன. 

இந்த மாதிரி பள்ளிகள் கொடுக்கும் டார்ச்சர் காரணமாக ஒரு சிலருக்கு படிப்பின் மீது அதிருப்தி ஏற்படும். ஒரு சிலருக்கு வாழ்க்கையின் மீதே அதிருப்தி ஏற்படும். அந்தப் பள்ளியில் படித்ததன் காரணமாக, அப்படி வாழ்க்கையின் மீதே அதிருப்தி ஏற்பட்டு மனநல ஆலோசகரிடம் சென்று சிகிச்சை பெற்று வரும் நண்பர்களையும் நான் பார்த்து வருகிறேன். எப்போதோ அரசுப்பணியில் சேர்ந்திருக்க வேண்டிய சில ஆசிரியர்கள் இன்றும் அந்தப் பள்ளிகளில் சிக்கி தவித்து வருவதை கேள்விப்பட்டு வருகிறேன். 

ராட்சசி, சாட்டை போன்ற படங்களில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எப்படியெல்லாம் வேலை செய்யாமல் ஏமாற்றுகிறார்கள் என்பதை காட்டி இருப்பார்கள். அதே போல “தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் எவ்வளவு கொடுமை அனுபவிக்கிறார்கள்” என்பதையும் எதாவது ஒரு இயக்குனர் படமாக்க வேண்டும்

Related Articles

அரை மில்லியன் இந்தியர்கள் நிம்மதி பெருமூ... H1B விசா காலம் முடிந்து, அமெரிக்காவில் நிரந்தரமாகத் குடியேறுவதற்கான  க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துக் காத்திருந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற இருப...
கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று திரைப்... கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: இயக்குனர் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் மம்முட்டி, அஜீத், தபு, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் இது. இந்தப் படம் பார்த்து முடித்த ...
பாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா ... சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்...
கப்பலில் 60000 யானைகளை ஏத்திட்டு போய் போ... கப்பலில் 60000 யானைகளை ஏத்திட்டு போய் போர் செஞ்சாங்க என் முன்னோர்கள் என்று சீமான் சமீபத்தில் சொன்னதை அடுத்து அது எப்படி வாத்தியாரே அறுபதாயிரம் யானையைக...

Be the first to comment on "ராசிபுரம் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நிலைமை என்ன? அங்கு என்னென்ன கொடுமைகள் நடக்கும்? "

Leave a comment

Your email address will not be published.


*