தமிழ் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கேபிள் சங்கர் என்பவரை தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு சினிமா மீது அதீத பற்று கொண்டவர். சினிமாவை உண்மையாக நேசிக்கும் மனிதர்களை நட்பாக்கி கொள்ளும் மனிதர். இவர் சினிமா சார்ந்த பல நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆனந்த விகடனில் “உறுத்தல்”, “ஏழரை சங்கரன்” போன்ற நுணுக்கமான சிறுகதைகள் எழுதி உள்ளார். அதிலும் குறிப்பாக “ஏழரை சங்கரன்” என்ற சிறுகதை அவ்வளவு அருமையாக இருக்கும்.
இவருடைய சமீபத்திய புத்தகம் தான் “24 சலனங்களின் எண்”. இயக்குனர் வசந்த பாலனிடம் பாராட்டு பெற்ற புத்தகம். விகடன் படிப்பறையில் சிறப்பிக்கப்பட்ட புத்தகம் என்று இதற்கு பல சிறப்புகள் உள்ளன.
இந்தப் புத்தகத்தில் ராம், கார்கி போன்ற பல கதாபாத்திரங்கள் உள்ளன. கல்லூரி முடித்தவுடனே அப்டேட்டான டெக்னாலஜியை கையில் வைத்துக்கொண்டு சினிமா துறையில் களம் இறங்கும் கார்கி என்கிற இளைஞன் இந்த நாவலில் கவனிக்கப்படுகிறான். ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் நடிப்புத்துறையின் மீது கொண்ட ஆசையின் காரணமாக நல்ல வருமானம் வரும் அந்த வேலைய் உதறி தள்ளுகிறான். நடிகர் சான்ஸ் வாங்குவதற்காக அவன் ஏறாத இடமில்லை, பார்க்காத ஆள் இல்லை. ஒரு கட்டத்தில் அவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கும் சான்ஸ் கிடைக்கிறது. இப்போது அவன் குழம்புகிறான். ஒரு படம் கூட பண்ணவில்லை என்றாலும் பல வருட சினிமா அனுபவம் இருக்கும் அனுபவசாலியும் அப்பாவியுமான அண்ணனின் முதல் படத்தில் பணி ஆற்றுவதா? அல்லது சமகால புரிதலும் தொழில்நுட்பமும் அறிந்த பணபலம் அதிகார பலம் கொண்ட நண்பனின் படத்தில் பணியாற்றுவதா என்று தடுமாறுகிறான் நாயகன். இதே போல நடிப்புத் துறை மீது ஆர்வம் இல்லாத ஒரு இளம்பெண்ணை தன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்து கடைசி வரைக்கும் தன்னுடைய பாலியல் அடிமையாக வைத்துக் கொள்ள முற்படும் ஒரு தயாரிப்பாளரும் வந்து செல்கிறார்.
இப்படிப்பட்ட மனிதர்களை சுமந்து நகர்கிறது “24 சலனங்களின் எண்” என்ற புத்தகம். சினிமா துறையில் சாதிக்க நினைப்பவர்கள் எப்படி ஜெ. பிஸ்மி அவர்களின் புத்தகங்களை படிக்கிறார்களோ, பாலு மகேந்திரா, மிஷ்கின், பாலா, அமீர், வெற்றிமாறன் போன்றோரின் புத்தகங்களை தேடி படிக்கிறார்களோ, சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தை தேடி படிக்கிறார்களோ? அதே போல இந்தப் புத்தகத்தையும் கண்டிப்பாக படித்து ஆக வேண்டும்.
சினிமா துறை குறித்தும், சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் குறித்தும், ஒரு படம் எப்படி உருவாகிறது என்பது குறித்தும் நிறைய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கே. பாலசந்தரின் “சர்வர் சுந்தரம்”, “விண்ணுக்கும் மண்ணுக்கும்”, “குசேலன்”, “தாவணிக் கனவுகள்”, “அழகிய தீயே”, “வெள்ளித் திரை”, “மகா நடிகன்”, “உப்புக் கருவாடு”, “சீதக்காதி”, “ஜிகர்தண்டா”, “இறைவி”, “கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற படங்கள் சினிமா எப்படி உருவாகிறது, அந்த வளையத்திற்குள் இருக்கும் நட்பு, துரோகம், அலைச்சல், வறுமை போன்றவற்றை நன்கு வெளிப்படுத்தி இருக்கும். அந்தப் படைப்புகளில் சொல்லப்படாத சில விஷயங்களை இந்தப் புத்தகத்தில் சொல்லி உள்ளார் எழுத்தாளர் கேபிள் சங்கர்.
எந்த பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் சாதிக்க நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தை ஒரு முறை படித்துவிட்டால் நீங்கள் சினிமா துறையில் பெரிய அளவில் ஏமாற்றப்பட மாட்டீர்கள். இந்தப் புத்தகத்தின் மூலம் எந்தெந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். எந்தெந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என்னென்ன வேலைகள், யாரிடம் எப்படி வேலை வாங்குவது, நுழைவதற்கு முன் என்னென்ன வேலைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் போன்ற தகவல்களை எல்லாம் இந்தப் புத்தகத்தின் மூலம் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம்.
புத்தகத்திலிருந்து சில முக்கியமான வரிகள்:
*“மனசுக்கு பிடிக்காத ஒண்ணை காசுக்காக செய்யுறது சூசைடுக்கு சமம்”
*இங்க எல்லாருக்கும் ஜெயிச்சவன் மட்டும் தான் தேவை
*ஒருத்தன் டைரக்டர் ஆகுறதுக்கு பசியும் பட்டினியுமாய் எத்தனை கஷ்டப்படறானோ.. அதை விட கஷ்டம் அவன் டைரக்டர்னு கமிட்டானவுடனே படுற கஷ்டம் தான். வேளைக்கு சாப்பாடும் பேட்டாவும் நிச்சயம்னாலும், அவன் இனிமே தான் நிறைய நட்புக்களை, எதிரிகளை சம்பாதிக்கப் போறான். இதை எவன் ஒருத்தன் சரியா டீல் பண்ணி வெளிய வர்றானோ அவன் தான் பின்னாடி பெரிய டைரக்டரா வெளிய வருவான். டைரக்டர் தான் கேப்டன் ஆஃப் தன் ஷிப்னு கிடைக்கிற மரியாதைக்கு பின்னாடி… கேப்டனாமில்ல கேப்டன். உனக்கு என்ன தெரியும்னு எக்ஸ்பீரியன்ஸ் ஆனவனும், இவனுக்கெல்லாம் என்ன தெரியும்னு அரைகுறையும், யார்கிட்ட எதை பேசினா நமக்குவாய்ப்பு கிடைக்கும்னு ஜால்ரா போடுற கோஷ்டியையும் அவன் தாண்டி வரணும்.
*எத்தனயோ டைரக்டர்களுக்கு பெரிய பெரிய கனவோடத்தான் இருந்திருக்காங்க. நிஜ வாழ்க்கை அவங்களோட கனவை அழிச்சிருச்சு. இப்ப இங்க நல்லா சம்பாரிச்சு, கார் பணம், ஈ.எம்.ஐன்னு இருக்குறவன் எல்லாருமே சர்வைவலுக்காக ஓடுறவன் தான். இன்னமும் என்னைக்காவது ஒரு நாள் எல்லாத்திலேர்தும் வெளியே வந்து அவன் கண்ட பழைய கனவை புதுப்பிச்சிடிருக்கிறவன் தான் அதிகம். பொறுமையாய், அட்ஜஸ்ட் பண்ணிக்கிறவன் சர்வைவ் ஆகுறான். முடியாதவன் இந்த சினிமாவே சாக்கடை திறமை இல்லாதவனத்தான் தலையில தூக்கி வச்சி ஆடும்னு புலம்பிட்டு, சினிமாவையும் விட முடியாம, செய்யுற வேலையுலேயும் ஒழுங்கா இல்லாம அல்லாடுவான்.
*இன்னும் எத்தனை நாள் காத்திருப்பது என்ற பயம் சேரும் போதுதான் நம்பிக்கை இழக்க ஆரம்பிக்கிறான்.
*ஜெயிக்கிறவங்களோட இருந்தாத்தான் நமக்கான அங்கீகாரம் இல்லாட்டி தெருவோரம் தான்
*தனக்கான எந்தவிதமான தனித்தன்மையும் இல்லாமல் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆவது அவ்வளவு சுலபமில்லை
*வாழ்க்கையே காத்திருப்புத்தான். ஆனால் சினிமாவின் காத்திருப்பு பெரும் சோதனை. எது எப்படி? எப்போது நடக்குமென்றே தெரியாமல் காத்திருக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் திறமையை மட்டுமே முன் வைத்து காத்திருக்க வேண்டும். பல சமயங்களில் பல பேரின் திறமைகளை சினிமா கண்டு கொள்ளாமலேயே போயிருக்கிறது. ஆனால் என்றோ, ஒருநாள், காத்திருப்போர் கூட்டத்திலிருந்து ஒருவன் மேலே வருவான். அவன் உடல் முழுவதும் ரத்தத்தால் தோய்திருந்தாலும், அவனின் வெற்றி கீழே இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு உற்சாகம் டானிக்.
*தமிழ் சினிமாவின் ஹாலிவுட்டான வடபழனியில், ஒவ்வொரு டீக்கடைக்கும் உள்ளேயும் பின்னேயும் ஒர் கதையிருக்கிறது. காவேரி கார்னர் பெரும்பாலும் உதவியாளர்களுக்கான இடம். ப்ரசாத் லேப்பின் எதிரே உள்ள டீக்கடையில் பெரும்பாலும் மீடியேட்டர்கள், உதவி இயக்குனர்களும் கூடுமிடம். பாரதியார் தெரு துணை நடிகர்கள் கூடுமிடம். அங்கு தினமும் கூடும் துணை நடிகர்களுக்கு அங்கேருந்து மேலே போய் நட்சத்திரமான சூரி, முனீஸ்காந்த் தான் அவர்களின் எதிர்காலம்.”தோ தெனம் இங்கதான் நானும் அவனும் பேசிட்டிருப்போம் எங்கங்க ஆடிசன்னு.. இன்னைக்கு அவன் ரேஞ்சே வேற.. நமக்கும் ஒரு டைம் வரும் அன்னைக்கு நாமளும் ஆவோம்” என்கிற வசனத்தை எல்லா டீக்கடையிலும் பார்க்கலாம். ஆனால் அங்கிருந்து போன பெரும்பாலானவர்கள் திரும்ப அங்கே வந்ததேயில்லை. வர முடிவதுமில்லை.
*பணம் இருக்கிறவன் கிட்ட அறிவோ, மனுஷத்தன்மையோ பெருசா இருக்காது. இது ரெண்டு இருக்கிறவன் கிட்ட பணம் இருக்காது
*“எடுத்த உடனே பெருசா கிடைக்கிறதுக்கு வரம் வாங்கிட்டுத்தான் வரணும்”
*சினிமாவுல திறமை மட்டும் தான் ஜெயிக்கும்னா.. இங்க ரொம்பவே கொஞ்ச ஆட்கள் தான் இருப்பாங்க. நேரமும், வர்ற வாய்ப்பை பயன்படுத்துறதுதான் முக்கியம். சமயங்கள்ல அறிவாளிதனத்த விட புத்திசாலித்தனம் தான் ஜெயிக்கும்.
*விமர்சனங்களை வளர்ந்தவர்கள் யாரும் விரும்புவதில்லை. வளர்கிறவர்கள் கவனிப்பார்கள்.
*உதவி இயக்குனர்கள் என்ற இனம் மிகவும் பாவப்பட்ட இனம். அதிலும் பாரம்பரிய முறையில் ஆபீஸ் பாயில் ஆரம்பித்து இன்றைய அசோசியேட் நிலை என்பது ஆகப் பெரிய பிரயத்தனம். நல்ல உதவி இயக்குனர் இல்லாமல் நல்ல டீம் அமையாது. கதை விவாதத்தின் போது, படமாக்கும் போது, போஸ்ட் ப்ரொடக்ஷனின் போது எப்போதுமே இவர்கள் தான் கண்கள். ஆனால் சினிமாவில் மிகவும் குறைவான சம்பளத்திற்கு ஏன் சில சமயம் சம்பளமே இல்லாமல் கூட படத்தை முடித்துக் கொடுப்பார்கள். காரணம் சினிமாவைத் தவிர வேறேதும் தெரியாதவர்கள். இன்றைக்கு நாம இந்த படத்துக்கு ஒழைச்சா. நாளைக்கு நம்ம படத்துக்கு ஒழைப்பாங்க என்று நம்புகிறவர்கள்.
*கடமையை செய் பலனை எதிர்பாராதேங்கிறது கிருஷ்ணன் சொன்னது. அது வாழ்க்கைக்கு ஒத்து வருதோ இல்லயோ சினிமாவுக்கு சரியா ஒத்து வரும். ஒரு சினிமா தானே தன்னை செதுக்கிக்கும். அது எப்படி வரணுங்கிறத.. வேலை செய்ய வேண்டியது மட்டும் தான் நாம்.
*என்னவோ ஆக வேண்டுமென்று எல்லாவற்றையும் விட்டு வந்தவர்களை என்னன்னவாகவோ மாற்றி அனுப்பும் மாய உலகம். இந்த சினிமா.
*ரிஸ்கையே வாழ்க்கையா வச்சிட்டிருக்கிறவங்க சினிமாக்காரங்க.
*தங்களோட திறமையை மட்டுமே நம்பிட்டு உழைச்சிட்டிருக்கிறவங்க லட்சம் பேர் இருக்காங்க. சினிமாவுல வெற்றிங்கிற வார்த்தைய நம்பி ரிஸ்க் எடுக்குறாங்க. ஒரு இயக்குனர் காணுற கனவை தயாரிப்பாளர் நம்பி, அதை மொத்த டீமும் நம்பித்தான் இறங்குறாங்க. அந்த நம்பிக்கையை ஆடியன்ஸுங்கிற கடவுள் ஏத்துக்கிட்டாத்தான் வெற்றி. இல்லாட்டி திரும்பவும் கனவு காண ஆரம்பிக்கணும். நம்பிக்கை தான் இந்த தொழிலுக்கு மூலதனமே.
ஜெயகாந்தன், அசோகமித்ரன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் எல்லாரும் சினிமா துறையை பற்றி எழுதியிருக்கிறார்கள். அதேபோல அந்த புத்தகத்தின் வரிசையில் 24 சலனங்களின் எண் புத்தகமும் அடங்கும். அனைத்து மனிதர்களுடைய மேன்மைகள் கீழ்மைகள் இரண்டையும் நன்கு ஆராய்ந்து ஆழமாக எழுதியுள்ளார். உதவி இயக்குனர்கள், நடிகர்கள் என்று இல்லாமல் சினிமா துறையில் சாதிக்க விரும்பும் அனைவருமே இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்கவேண்டும். – 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.
நிச்சயம் படமாக்கப்பட வேண்டிய நாவல் – இயக்குனர் சேரன்
சினிமா துறை சார்ந்த கதை எழுதும்போது சினிமா துறையில் உள்ள யார் மனதையும் புண்படுத்தாத வண்ணம் எழுத வேண்டும். அது ஒரு மிகப்பெரிய சிக்கலான வேலை. அந்த வேலையை மிக எளிமையாக நேர்த்தியாக கையாண்டுள்ளார் எழுத்தாளர் கேபிள் சங்கர்! – இயக்குனர் சுப்பிரமணியம் சிவா
சினிமா துறையில் உள்ள கீழ்மைகளை எல்லாம் நன்கு விளக்கி விட்டு கடைசியில் சினிமாவை உண்மையாக நேசிக்கும் மனிதர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்து விட்டுச் செல்கிறார் கேபிள் சங்கர். அந்த விதத்தில் இந்த புத்தகம் உண்மையிலேயே கொண்டாட வேண்டிய ஒரு புத்தகம் தான்.
இவருடைய இந்தப் புத்தகங்கள் அச்சுப் பதிப்பாகவும், கிண்டிலில் மின் நூலாகவும் கிடைக்கப் பெறுகின்றன.
Be the first to comment on "சினிமாவில் சாதிக்க துடிப்பவர்கள் கேபிள் சங்கரின் “24 சலனங்களின் எண்” புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?"