தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின்
எண்ணிக்கை கோடி கணக்கில் உள்ளது. அவற்றையெல்லாம் தீர்த்து வைக்கத் தினம் ஒரு நீதிமன்றம் திறந்தாலும் போதாது. சாமானியன் ஒருவனுக்கு நீதிமன்றத்தில் என்ன தான் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே பல ஆண்டுகள் ஆகும். அந்த அளவுக்குச் சிக்கல் உள்ள
ஒரு அமைப்பாக இருக்கின்றன இந்திய நீதிமன்றங்கள். கடந்த பல ஆண்டுகளாகவே நீதிமன்றங்களில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டுமென்பது சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்களின் கருத்து ஆகும்.
நவீன நீதி கடிகாரம்
மத்திய அரசின் வழி காட்டுதலின் படி இனி அனைத்து உயர்நீதி மன்றங்களிலும் 24 மணி நேரமும்
இயங்கும் வகையிலான எல்ஈடி(LED) செய்தி பலகைகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன் படி ஒரு நாளைக்குத் தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள
வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் உயர் நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த செயல்திறன்
போன்றவற்றை அந்தச் செய்தி பலகையில் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம்
வெளியிடப்படும்.
பிரதமரின் யோசனை
பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையின் படி இந்தத் திட்டம் செயல் படுத்தப்பட இருக்கிறது.
உயர்நீதி மன்றங்களைத் தொடர்ந்து கீழ் நீதிமன்றங்களுக்கும் இந்தத் திட்டம் படிப்படியாகச்
செயல்படுத்தப்பட இருக்கிறது. இளைய சட்ட அமைச்சர் பி.பி. சவுத்ரி இது குறித்து பேசும் போது
‘இந்தத் திட்டம் செயல் படுத்தப்பட்டால் நீதிமன்றங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி
நிகழ வாய்ப்பு இருக்கிறது. யார் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை
பொது மக்கள் அறிந்து கொள்ள முடியும்’ என்று தெரிவித்தார்..
பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகள்
மிக மோசமான செயல்திறனை வெளிப்படுத்தும் வழக்குகளின் பட்டியலில் அலகாபாத் முதல்
இடத்தில் இருக்கிறது. அதில் மட்டும் கிட்டத்தட்ட 267713 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதைத் தொடர்ந்து பம்பாய் 145425 நிலுவை வழக்குகளுடனும் உள்ளது. இந்தப் பட்டியலில்
பம்பாயைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியான, கல்கத்தா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,
தெலங்கானா மற்றும் ஆந்திரா, மெட்ராஸ் , ஒரிசா மற்றும் பாட்னா இடம் பிடித்து உள்ளன.
இந்த நீதி கடிகாரம் சோதனை அடிப்படையில் முதன் முதலில் நீதித்துறையின் டெல்லி
அலுவலகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்டது.
Be the first to comment on "வழக்கு விவரங்களை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் நவீன நீதி கடிகாரம்"