குறைந்த விலை சானிட்டரி நாப்கின் தயாரித்து புரட்சி செய்த அருணாசலம் முருகானந்தம் அவர்களின் கதையை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம் பேட்மேன். அருணாசலம் முருகானந்தம் கோயம்புத்தூரை சேர்ந்தவர். அவரது கண்டுபிடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் சானிட்டரி நாப்கின்களின் விலையையும் கணிசமாக குறைத்தது. அவரது கதையை கையிலெடுத்த பாலிவுட் அதில் நாயகனாக அக்சய்குமாரையும், நாயகியாக ராதிகா ஆப்தேவையும் நடிக்க வைத்தது. பேட்மேன் திரைப்படம் வெளியாகி நிறைய நேர்மறையான விமர்சனங்களையும், பாராட்டுகளையும் குவித்த வண்ணம் இருக்கிறது. வசூல் ரீதியாகவும் பேட்மேன் திரைப்படம் சாதனைச் செய்துள்ளது.
தமிழர் ஒருவரின் கதையை முதன்முதலில் நாம் எடுக்காமல் பாலிவுட் முந்திக்கொண்டதே என்ற வருத்தத்தில் இருப்பவர்களுக்காக ஒரு நல்ல செய்தி. இந்தியில் பேட்மேன் திரைப்படத்தை தயாரித்த கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம், தமிழில் இத்திரைப்படத்தை மறு ஆக்கம் செய்ய பெரிதும் விருப்பம் கொண்டுள்ளது. கதையின் நாயகனாகத் தமிழில் தனுஷ் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே தனுஷ் மாரி 2 , என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் ஹாலிவுட்டில் அவர் நடித்து வரும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ போன்ற திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இப்படங்களில் நடித்து முடித்த கையோடு பேட்மேன் திரைப்படத்தின் தமிழ் ஆக்கம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழ் மண்ணின் நிஜ நாயகன் ஒருவரின் கதையை திரையில் தமிழில் காணத் தமிழ் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Be the first to comment on "தனுஷ் நடிப்பில் தமிழில் மறு ஆக்கம் காண்கிறது பேட்மேன்"