யார அதிகம் நேசிக்கிறமோ அவிங்கள தான் அதிகம் வெறுக்கிறோம்… என்ற தத்துவத்துடன் தொடங்குகிறது படம். ஸ்டைலிசான லவ் படம்ங்கற பேருல என்னத்தயோ எடுத்து வச்சிருப்பானுங்க போல என்று நினைப்போடு திரைக்குள் அமர்ந்திருந்தால் உள்ளே சென்ற சில நொடிகளில் அந்த அலட்சியத்தை சுக்குநூறாக உடைத்து தள்ளி வாங்க எங்களோடு கொஞ்சம் பயணிங்க என்று விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் செல்கிறார் இயக்குனர். எந்த இடத்திலும் நெளிய விடாத திரைக்கதை.
கடவுளே அவிங்க பிரிஞ்சுறக் கூடாது, அவிங்க ஒன்னு சேந்தரனும் என்று ரசிகர்கள் வேண்டிக்கொள்ளும் அளவுக்கு நாயகன் நாயகி கெமிஸ்ட்ரி இருக்கிறது. இனி மாதவன், சூர்யா, ஆர்யாவுக்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் பிடித்த நாயகனாக ஹரிஷ் கல்யாண் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஓவர் ஆக்டிங் செய்துவிடாமல் தேவையான நடிப்பை மட்டும் தந்து மனதை கவர்கிறார். அவருடைய நண்பர்களாக வரும் மா கா பா ஆனந்த், மாரி, பால சரவணன் மூவரும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.
யார் அந்த நாயகி? விஜய் டிவி பிரியங்காவையும் நடிகை டாப்சியையும் நினைவூட்டும் முகச்சாயல். கோர்ட்டில் நாயகனுக்கு ஆதரவாக பேசுதல், வீட்டில் யாருமில்லாத போது நாயகனை அழைத்தல், திருமணத்திற்கு முந்தைய நாள் காதலனை தேடி வருதல், பிரிந்து போன காதலனை தேடிப் போதல் என்று தோன்றிய அனைத்துக் காட்சிகளிலும் போதுமான அளவுக்கு மட்டுமே நடித்து மனதை கவர்கிறார்.
படத்தின் இன்னொரு பலம் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். ஏய் சண்டாளி, கண்ணம்மா உன்ன ஆகிய இரண்டு பாடல்களும் மனதை கவர்கிறது. பின்னணி இசை ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது. ஒளிப்பதிவு பக்கா. குறிப்பாக இரவு நேரக்காட்சிகளிலும் கிளைமேக்ஸில் வரும் டப்பாங்குத்து பாடலிலும் கேமரா மேன் கவனத்தை ஈர்க்கிறார்.
இடைவேளைக்கு முன்பு காட்டப்படும் அம்மா பிளாஸ்பேக் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமில்லாத காட்சிகளாக தெரிந்தாலும் கிளைமேக்ஸில் அம்மாவின் கடிதங்களையும் அம்மா பலமுறை தன்னை தேடி வந்ததையும் நினைவில் கொண்டு நாயகன் தன் காதலியை தேடிப்போகும் இடத்தில் கைதட்டல் குவிகிறது. கிளைமேக்ஸ் எங்கே அமரகாவியம் படத்தைப் போல அமைந்துவிடுமோ என்று பதற வைத்து வேறொரு கிளைமேக்ஸ் தருகிறார் இயக்குனர். மொத்தத்தில் இந்தப் படம் அம்மாவையும் காதலியையும் அதிகம் நேசிக்க வைக்கும் ஒரு குடும்ப படம். என்னை நிராகரித்த என் காதலியை கொல்லனும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம்! இந்தாண்டின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக இந்தப் படம் நிச்சயம் இடம் பிடிக்கும்!
Be the first to comment on "அம்மாவையும் காதலியையும் அதிகம் நேசிக்க வைக்கும் படம்! -இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்"