எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் “பேசாத பேச்செல்லாம்” ஒரு பார்வை!

Pesatha-Pechellam short film - Based on the story by Writer Lakshmana Perumal

நாளைய இயக்குனர் சீசன் 6ல் வெளியான குறும்படம் தான் பேசாத பேச்செல்லாம். சிறுகதையை தழுவிய குறும்படங்கள் பிரிவில் இயக்குனர் ஜெய் லட்சுமி இயக்கத்தில் வெளியான படம் இது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நான்கு குறும்படங்கள் ஒளிபரப்புவார்கள். அப்படி பேசாத பேச்செல்லாம் குறும்படம் வெளியான வாரத்தில் அந்த வாரத்திற்கான சிறந்த குறும்பட விருதை வென்றது இந்தக் குறும்படம்.

முதலில் இந்தக் குறும்படத்தின் இயக்குனர் ஜெய் லட்சுமியைப் பற்றி பேச வேண்டும். அவருடைய பெயர் உண்மையில் ஜெய் லட்சுமி அல்ல, அது அவருடைய அம்மாவின் பெயர். அம்மாவை மட்டும் அதிகம் நேசிக்க கூடிய மனிதரல்ல இவர், ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே பெரிதும் மதிக்கத் தெரிந்த நேசிக்கத் தெரிந்த ஒரு இயக்குனர் என்றுதான் இவரை சொல்ல வேண்டும். அப்படி சொல்ல வைத்தது அவருடைய படைப்புகள். அவர் இயக்கிய குறும்படங்களான அணிலாடும் முன்றில், உடல், பேசாத பேச்செல்லாம் ஆகிய மூன்று குறும்படங்களுமே பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்கள். அணிலாடும் முன்றில் குறும்படத்தில் சேட்டு வீட்டில் வீட்டு வேலை செய்யும் சிறுமி வயசுக்கு வருவதை கதைக்களமாக வைத்திருந்தார். உடல் குறும்படத்தில் ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கு நிர்வாணமாக போஸ் கொடுக்கும் மாடல் பெண்ணை பார்த்து ஓவியம் வரையும் இளைஞனின் மன உணர்வுகளை கதைக்களமாக வைத்திருந்தார்.

அதே போல பேசாத பேச்செல்லாம் குறும்படமும் ஒரு பெண்ணின் வலியை பேசுகிறது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்திருக்கும் கணவன், பாயில் படுத்திருக்கும் பச்சிளம் குழந்தை இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் முதலில் காட்டிவிடுகிறார் இயக்குனர். கணவன், குழந்தை இருவரையும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார் பாண்டியம்மா. வறுமை வாட்டி எடுக்க ஒற்றை மனிதியாகப் போராடும் பாண்டியம்மாவால் சொந்தமாக ஒரு புது பாவாடை கூட வாங்க முடியவில்லை. கிழிந்த அந்த ஒரேயொரு பாவாடையையே கட்டிக்கொண்டு வேலைக்குச் செல்கிறாள். வேலைக்குச் சென்ற இடத்தில் இடைவேளையின் போது சக பெண் தொழிலாளிகளுடன் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது, “பாண்டியம்மா பாவாடைய நம்ம ஊர் பொருட்காட்சில வச்சா கூட்டம் கூடிரும்ல… ” என்று சக பெண் தொழிலாளி ஒருத்தி கலாய்க்கும் இடம் மற்றும் தெரிந்த ஒருத்தியிடம் பாவாடையை கடன் வாங்கப் போகும் இடம் இரண்டும் நம்மை கலங்க வைக்கிறது. கிளைமேக்ஸ் நம் மனதை என்னமோ செய்துவிடுகிறது. படம் பார்த்து முடித்த சில நிமிடங்கள் நிச்சயம் நம்மால் வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்த இயலாது. சாத்தூரை கதைக்களமாக கொண்ட இந்தக் குறும்படத்தை சாத்தூரிலயே படமாக்கி இருக்கிறார். நடிகர் நடிகைகள் தேர்வு, அவர்கள் பேசும் தொனி, லொக்கேசன், பின்னணி இசை, ஒலிப்பதிவு என அனைத்தும் நன்றாக உள்ளன.

ஒரு குறும்படம் என்றால் நெஞ்சில் கத்தி பாய்ந்தது போல் இருக்க வேண்டும் என்று நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு வந்த இயக்குனர் வசந்தபாலன் கூறினார். அவர் சொன்னது போல நெஞ்சில் கத்தி பாய்ந்தது போன்ற உணர்வை நிச்சயம் இந்தக் குறும்படம் உங்களுக்கு ஏற்படுத்தும். எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய கனவெது நிஜமெது என்ற சிறுகதை தான் இந்தக் குறும்படத்தின் மூலக்கதை.

இதே இயக்குனர் எழுத்தாளர் நரன் எழுதிய சரீரம் என்ற சிறுகதையை மையமாக வைத்து உடல் என்ற குறும்படம் எடுத்தார். இந்தப் படமும் வெற்றிமாறனிடம் பாராட்டு பெற்ற படம். ஒரு பெண்ணை காம பொருளாக குறிப்பாக பெண்ணின் நிர்வாண உடலை காம பொருளாகவே பார்த்து பழக்கப்பட்ட இளைஞன் ஒருவனின் மன உணர்வுகளை பதிவு செய்த படம் இது. ஓவியக் கல்லூரி மாணவனான அந்த இளைஞன் பெண்ணின் நிர்வாண உடலை முதல்முறையாக பார்த்து வரையும்போது அவனுக்குள் எழும் மாற்றங்களை மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். குறிப்பாக கிளைமேக்சில் அந்த இளைஞனின் உடல் மீது ஒரு பெண்ணின் நிர்வான உடல் ஊர்ந்து செல்லும் காட்சி அட்டகாசம். 

பேசாத பேச்செல்லாம், உடல் படத்தைப் போலவே இவருடைய இன்னொரு குறும்படம் பற்றி பார்ப்போம். அந்தக் குறும்படத்தின் பெயர் அணிலாடும் முன்றில். சேட்டு வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண். அவளுக்கு வயதுக்கு வரப்போகும் வயதில் ஜானு என்றொரு பெண் குழந்தை, அந்தப் பெண் குழந்தையை விட இரண்டு மூன்று வயதுகள் குறைவான இன்னொரு பையன். வறுமை அவர்களை வாட்டி எடுக்கிறது. எந்த அளவுக்கு வறுமை என்றால் தன் பிள்ளைகளுக்கு உள்ளாடை வாங்கித் தர முடியாத அளவிற்கு கூட வறுமை. அந்த சிறுவனுக்கு சொந்தமாக ஒரு கக்கூஸ் கட்ட வேண்டுமென்று ஆசை. பொது கக்கூஸை மோந்து மோந்து பார்க்கும் காட்சி மிகத் துயரம். அம்மாவிடம், “அம்மா நம்ம ஒரு கக்கூஸ் கட்டலாமா…” என சொல்ல “நம்ம வீடே கக்கூஸ் சைஸ் தான்டா இருக்கு…” என்கிறாள் அம்மா. அப்போது அந்த சிறுவனின் அக்கா, “அம்மா… மொதல்ல இந்த ஓட்டக் குண்டிக்கு ஒரு ஜட்டி எடுத்துக்குமா.. என் ஜட்டிய எடுத்து எடுத்து போட்டுக்குறான்…” என்று தம்பியை பற்றி சொல்லும் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை. அதே சிறுவன் தன் அக்காவுடன் சேட்டு வீட்டுக்கு வேலைக்குச் செல்லும்போது அங்கு உள்ள கக்கூஸை மோந்து பாத்து “அக்கா இந்த கக்கூஸ் வாசமா இருக்கு… நான் ஒரே ஒரு தடவ ஆய் போய்க்கிட்டா…” என்று சொல்லும் காட்சி யாருப்பா இந்த இயக்குனர் என ஆச்சரியப்பட வைக்கிறது. 

இயக்குனர் ஜெய்லட்சுமி இயக்கிய குறும்படங்களின் லின்க்குகள் கீழே உள்ளன. பார்த்து ரசித்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

பேசாத பேச்செல்லாம்: https://youtu.be/MaMfO9T_T6Y

அணிலாடும் முன்றில்: https://youtu.be/o1GkY7z_fcg

உடல்: https://youtu.be/_qL-gC67aFo

Related Articles

ஜோதிகாவின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக... அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்த தக்க பதில்களே கிடை...
உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளை... முருகன், பார்வதி, மித்தாலி சட்டர்ஜி, பள்ளி முதல்வர் ஃப்ரான்சிஸ் தாமஸ், காயத்ரி, முகமது ரஸூல், நிக்கி, ரத்னம், வள்ளி, கான்ஸ்டபிள், ஓங்கே மொழிபெயர்ப்பாள...
சட்டப்பேரவையில் தனிஒருவனாக தினகரன்! R... 2018ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடங்கி வைத்தது, தனியொ...
முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு ... பல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண...

Be the first to comment on "எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் “பேசாத பேச்செல்லாம்” ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*