” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் ” புத்தகத்திலிருந்து சில கேள்வி பதில்கள்!

Few Questions from the book Mani Ratnam Padaippugal Orr Uraiyaadal

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் திரு. மணிரத்னம் அவர்கள். அவருடன் பிரபல திரைவிமர்சகர் மேற்கொண்ட உரையாடல், ” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் ” என்ற தலைப்பில் புத்தகமாக கிடைக்கிறது. அந்தப் புத்தகத்திலிருந்து ரங்கனும் ரத்னமும் மேற்கொண்ட உரையாடலின் சிறு பகுதியை இங்கு இணைத்துள்ளோம். 

1.பரத்வாஜ் ரங்கன்: தவிர்க்க முடியாத முதல் கேள்வி. நீங்கள் பார்த்த முதல் திரைப்படம் நினைவிருக்கிறதா?

மணி ரத்னம்: உறுதியாகச் சொல்ல முடியவில்லை. திரைப்படங்கள் பார்ப்பது எங்கள் குடும்பத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. எனது இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி, ஒன்றுவிட்ட சகோதரர்கள், அத்தைகள், மாமாக்கள் என மிகப் பெரிய கூட்டுக் குடும்பம் அது. என் குடும்பத்தார் எடுக்கும் படங்களைத் தவிர மற்ற படங்களைப் பார்க்கச் சிறியவர்களான எங்களுக்கு அனுமதி இல்லை. என் சித்தப்பா வீனஸ் கிருஷ்ணமூர்த்தி ஒரு தயாரிப்பாளர் (வீனஸ் என்பது அவரின் அடைமொழிதானே தவிர, அவருக்கும் வீனஸ் ஸ்டூடியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). என் தந்தை எஸ்.ஜி. ரத்னம் வாழ்நாள் முழுதும் திரைப்பட விநியோகஸ்தராகவே இருந்தவர். வீனஸ் பிக்சர்ஸ் எடுத்த முதல் படம் அமரதீபம் என்று நினைக்கிறேன். அதை அவர்கள் இந்தியிலும் ரீமேக் செய்தார்கள். பின் நிறையப் படம் எடுத்தார்கள். உத்தமபுத்திரன், கல்யாண பரிசு, பட்டணத்தில் பூதம், இந்திப் படங்களான சூரஜ், அப்னா தேஷ் என்று நீண்டுகொண்டே போகும் பட்டியல் அது. எடுக்கும் படங்களின் துண்டு துண்டான காட்சிகளைப் பார்க்க அவர்கள் போகும்போது நாங்களும் கூடவே ஒட்டிக்கொள்ள அனுமதி உண்டு. அடிப்படையில் அவை திரைப்பட ரஷ்கள் போன்றவைதான். ப்ரிவியூ காட்சிகளுக்குப் போகும்போது, காரில் இடம் இருந்தால் எங்களையும் அழைத்துச் செல்வார்கள். இல்லையேல் எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். நான் பார்த்த படங்களிலேயே உத்தமபுத்திரன் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதுவும் நான் பிற்காலத்தில் அந்தப் படத்தைத் திரும்பப் பார்த்ததனால்தான் நினைவில் இருக்கிறது என்று தோன்றுகிறது. திரையரங்குக்குச் சென்று படம் பார்க்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்ததில்லை. அது ஏதோ சீட்டாட்டம்போல்தான். எப்போதாவது அதிர்ஷ்டம் அடிக்கும். என் சித்தப்பா ஏதாவது படத்தைத் தயாரிப்பதாக இருந்தால், குடும்பத்தினரை மெரீனா கடற்கரைக்கு அழைத்துச் சென்று கதையை விவரித்துச் சொல்வார். அந்த நினைவுகள் என் மனத்தில் நன்கு பதிந்திருக்கின்றன. வீட்வீட்டிலிருந்து உணவு கையோடு எடுத்துச் செல்லப்பட்டிருக்கும். சிறியவர்களுக்கு அந்த விவாதங்களில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. பெரியவர்கள் அனைவரும், எடுக்கப் போகும் படத்தின் கதையைப்பற்றிப் பல்வேறு அபிப்ராயங்களைச் சொல்வார்கள். அவர்கள் சொன்ன ஆலோசனைகளை அவர் எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்பது எனக்குத் தெரியவில்லை.

2.ரங்கன்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அது ஆடியோ ப்ரிவியூபோல் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அது சரி, எந்த வயதிலிருந்து தொடர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ரத்னம்: அப்போது நடுநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். திரைப்படங்களில் நல்ல ஆர்வம் இருந்தது. மேலும், ஒவ்வொரு படத்தின்மீதும் எனக்கு ஏதோ ஒரு அபிப்பிராயம் இருந்தது. அதை நான் பிற்காலத்தில்தான் உணர்ந்தேன். எல்லாச் சிறுவர்களுக்கும் தாங்கள் பார்க்கும் திரைப்படங்களைப்பற்றி ஏதாவது அபிப்ராயம் இருக்குமா, அப்படியே இருந்தாலும் அது அவர்கள் நினைவில் தங்குமா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், சில படங்கள் பிடித்திருந்தன, சில படங்கள் பிடிக்கவில்லை என்பதெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது. 

பொதுவாக,சிறுவர்களுக்கு எல்லாப் படங்களும் பிடிக்கும். சில படங்கள் கூடுதலாகப் பிடித்திருக்கும். படம் பார்த்துவிட்டு காரில் வீடு திரும்பும்போதெல்லாம், ‘படம் எப்படி இருக்கிறது’ என்று கேட்பது அங்கிளின் வழக்கம். திரைத்துறையிலேயே ஊறிய ஒரு குடும்பத்தில் இது அர்த்தம் பொதிந்த, மிகவும் அவசியமான கேள்வி. படத்தைப்பற்றி விரிவாகச் சொல்ல ஏதாவது கருத்து என்னிடம் இருக்கும். படம் நன்றாக உள்ளது, நன்றாக இல்லை போன்ற ஒற்றை வரி பதில்களை நான் என்றுமே சொன்னதில்லை. எனக்குத் திரைப்படம் எடுக்கும் உத்தியெல்லாம் அப்போது தெரிந்திருக்கவில்லை. எப்போதாவது ஷூட்டிங் பார்க்கச் செல்வேன். ஆனால் அதில் எந்த ஈடுபாடும் எனக்கு இருந்ததில்லை. கோடை விடுமுறை என்றால், படப்பிபடப்பிடிப்பு எந்த ஊரில் நடந்தாலும் எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்வார்கள். ரொம்பவும் போரடிக்கும். அங்கே ஒரே காட்சியைத் திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டிருப்பார்கள். அது ஏன் என்று விளங்கியதில்லை. பல்லைக் கடித்துக்கொண்டுதான் படப்பிடிப்புத் தளத்தில் பொழுதைக் கழிப்பேன். எனக்கு ஷூட்டிங் சுத்தமாகப் பிடிக்காதபோதும், நான் இயக்குநராக உருவெடுத்தது ஆச்சரியமாகவே இருக்கிறது. நான் முதலில் ரசித்த படம் எது என்று சற்று மெனக்கெட்டு என் நினைவுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துச் சொல்வதானால், ஹட்டாரி (Hatari. John Wayne நடித்து Howard Hawks இயக்கிய படம்) என்றே தோன்றுகிறது. என் குடும்பத்தினர் இல்லாமல் நான் பார்த்த முதல் படம் அதுதான் என்று நினைக்கிறேன். எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி அவரது பிள்ளைகளோடு சேர்த்து என்னையும் அழைத்துச் சென்றார். என்னை அதிகம் ஈர்த்த படம் அது. வீட்டுக்குத் திரும்பியபின்னும் நான் அந்தப் படத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்பேசிக்கொண்டிருந்ததால், என் குடும்பத்தாரையும் அந்தப் படத்தைப் பார்க்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அவர்கள் போனபோது என்னையும் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. திரும்பிவந்ததும் என் தந்தை, இந்தப் படத்தையா பார்த்தாக வேண்டிய படம் என்று சொன்னாய் என்று என்னைத் திட்டினார். அதன் பிறகு எங்கள் இருவருடைய கருத்துகளும் ஒருபோதும் ஒத்துப்போகவில்லை. அதற்குமுன் எல்பின்ஸ்டன் திரையரங்கில் ஒரு படம் பார்த்தாக நினைவிருக்கிறது. அப்படத்தின் பெயர் ஜங்கிள் கேட் (Jungle Cat) என்று நினைக்கிறேன். படத்தைப்பற்றி எனக்குப் பெரிதாக ஒன்றும் நினைவில் இல்லை. எனினும், அந்தத் திரையரங்கில் சாப்பிட்ட ஐஸ்கிரீமின் ருசி இன்னும் நாவில் இருக்கிறது. சென்னையிலேயே சிறந்த ஐஸ்கிரீம் பார்லர் அந்தத் திரையரங்கில்தான் இருந்தது. நான் கலாக்ஷேத்ரா வளாகத்தினுள் அமைந்த பெசண்ட் தியோசாபிகல் பள்ளி விடுதியில் தங்கியிருந்த காலத்தில்தான் தீவிர சினிமா ரசிகனாக உருவெடுத்தேன். எங்கள் விடுதிக்கு மிக அருகில் ஒரு சினிமாக் கொட்டகை இருந்தது. அங்கே இரவு நேரங்களில், ஓர் ஆங்கிலப் படத்தையும் பின் ஒரு தமிழ்ப் படத்தையும் திரையிடுவார்கள். அதிகபட்ச டிக்கெட்டின் விலையே வெறும் ஒரு ரூபாய்தான். அங்கே ஒரே ஒரு ப்ரொஜெக்டர்மட்டுமே இருந்ததால், ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கும் படச் சுருள்களை மாற்றும்பொருட்டு படத்தை நிறுத்திவிடுவார்கள். அங்குதான் நிறையப் படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். இரவு நேரங்களில் வெறும் லுங்கியும் பனியனும்மட்டும் அணிந்து, ஏதோ சிறுநீர் கழிக்க வெளியே வருபவர்களைப்போல் அறையை விட்டு வெளியே வந்து, யாரும் பார்க்காத வேளையில் விடுதியின் வேலியைத் தாண்டிவிடுவோம். எப்போதாவது விடுதியின் பொறுப்பாளர் திரையரங்கில் கண்ணில் படுவார். நாங்கள் அவரைச் சட்டை செய்ய மாட்டோம். அவரும் எங்களைச் சட்டை செய்யாமல், எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து நகர்ந்துவிடுவார்.

3.ரங்கன்: படம் பார்த்ததும் உங்கள் நண்பர்களுடன் விவாதிப்பீர்களா?

ரத்னம்: படங்கள் என்பவை பார்த்து ரசிப்பதற்காகமட்டுமே என்றே கருதுகிறேன். படங்களைப்பற்றி விவாதிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததா என்று தெரியவில்லை. விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை படிப்பும், பம்பாய் ஜம்னாலால் பஜாஜ் கல்லூரியில் எம்.பி.ஏவும் படித்த காலத்தில் திரைப்பட விவாதங்களில் அவ்வப்போது ஈடுபட்டது உண்டு. அதுவரையில் படங்களைப்பற்றி அதிகம் விவாதித்தது இல்லை (நான் நிதித்துறையில் பட்டம் பெற்றவன். என் படங்களின் பட்ஜெட் சில நேரங்களில் திட்டமிட்டதைவிட அதிகமாகிவிடும் அதிகமாகிவிடும்போது தயாரிப்பாளர்களால் அதை நம்பவே முடியாது). திரைப்பட ரசனை என்பது நம்மை அறியாமலேயே நம்முள் உருவாகிறது. ஒரு டென்னிஸ் வீரரையோ கிரிக்கெட் வீரரையோ ரசிப்பதுபோல்தான். டென்னிஸ் வீரர் ராட் லேவரை ரசிப்பதுபோன்றது. உங்களுக்கு ஒருவரைப் பிடித்திருந்தால் அவர் விளையாடுவதைத் தொடர்ந்து பார்ப்பீர்கள். அல்லது அவர் விளையாடும்போது ரேடியோவைக் காதில் வைத்தபடிக் கேட்டுவந்திருப்பீர்கள். அவர் விளையாடுகிறார் என்பதே உங்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயமாக ஆகியிருக்கும். அதேபோல்தான் சினிமா ரசனையும். ஓர் இயக்குநரையோ நடிகரையோ உங்களுக்குப் பிடித்துப்போய்விட்டால், அவர்கள் உங்களுக்கு முக்கியமானவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுடைய படங்களைத் தவறாமல் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

4.ரங்கன்: படிப்பில் நீங்கள் வல்லவரா?

ரத்னம்: வகுப்பிலேயே நான்தான் முதல் மாணவன் என்று சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனால், அது உண்மை இல்லை. எனக்குப் படிப்பே வராது என்று சொல்லவும் ஆசைதான். ஆனால், அதுவும் உண்மையில்லை. நான் சராசரியாகப் படிக்கக்கூடியவன். என் திரைப்படங்கள் அளவுக்கு என் படிப்பு டிரமாட்டிக்காக இருக்கவில்லை என்பதே உண்மை.

5.ரங்கன்: சிலர் சிறு வயதில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட படத்தைப் பார்த்திருப்பார்கள். அந்த நொடியிலேயே திரைப்பட இயக்குநர் ஆகிவிடவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருப்பார்கள். நீங்கள் அப்படியானவர்களில் ஒருவர் இல்லைபோல் இருக்கிறது?

ரத்னம்: நானும் அவர்களைப்போல் இருந்திருக்கவேண்டும் என்றுதான் ஆசை. சினிமாதான் என் லட்சியம் எனச் சிறு வயதிலேயே தெரிந்திருந்தெரிந்திருந்தால், நிச்சயம் படிப்பில் என் நேரத்தை வீணடித்திருந்திருக்க மாட்டேன். வேடிக்கை ஒருபுறம் இருக்கட்டும். நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு நல்ல படங்கள் தமிழில் வந்திருந்தால், நானெல்லாம் நிச்சயம் இயக்குநர் ஆகியிருக்க மாட்டேன் என்றே எண்ணுகிறேன். அன்று மிகவும் திறமைவாய்ந்த பாலசந்தர் இருந்தார். பின் 1970-களின் நடுவில், நான் என் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த அந்தக் காலகட்டத்தில், பாரதிராஜாவும் மகேந்திரனும் வந்தார்கள். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலேவும் மகேந்திரனின் உதிரிப்பூக்களும் என்னைப் பிரமிக்கவைத்தன. நான் என் முதல் படத்துக்கான வேலையில் ஈடுபட்டிருந்தபோதுதான் உதிரிப்பூக்களைப் பார்த்தேன். இதுவரை நான் பார்த்த சிறந்த தமிழ்ப் படங்களில் அதுவும் ஒன்று. சிறந்த படத்துக்கான முழுத் தரமும் அதில் இருந்தது. எந்தத் தயக்கமும் இல்லாமல் மகேந்திரன் அதனை இயக்கியிருந்தார். ஆனால், மற்ற தமிழ்ப் படங்கள் எவையும் நன்றாக இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு தேக்கநிலை இருந்தது என்பதே உண்மை. சராசரியான படங்களே பெரும்பாலும் வந்துகொண்டிருந்தன. அதைப் பார்க்கும்போது, இவர்களைவிட நல்ல படங்களை நம்மால் எடுக்க முடியும் என்ற எண்ணம் சினிமாவைப்பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூட வந்திருக்கும். நான் ஏதோ ஒரு சில வருடங்களைப்பற்றிமட்டும் பேசவில்லை. என் கல்லூரி வாழ்க்கை தொடங்கிய காலத்திலிருந்தே நிறையப் படங்களைப் பார்த்துவந்திருக்கிறேன். பெரும்பாலான தமிழ்படங்கள் சராசரிக்கும்கீழேயே இருந்தன. அந்தப் படங்கள் உங்கள்மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இன்னும் நிறைய பாலசந்தர்களும் மகேந்திரன்களும் இருந்திருந்தால், மிகவும் சந்தோஷமாகக் கடைசிவரை ஒரு சினிமா ரசிகனாகவே இருந்திருப்பேன். நிச்சயம், படம் இயக்கவேண்டும் என்று எண்ணியிருக்கமாட்டேன்.

6.ரங்கன்: வேலையை விட்டுவிட்டுப் படமெடுக்கப் போகிறேன் என்றதும் உங்கள் வீட்டில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?

ரத்னம்: என் தாய் பதறிப்போய்விட்டார். ஒரு பாதுகாப்பான வேலையில் நான் ஈடுபடவேண்டும் என்று விரும்பினார். ஒரு தயாரிப்பாளரின் மனைவியாக வாழ்நாள் முழுவதையும் திரைத்துறையின் விளிம்பில் இருந்தபடியே கழித்திருந்ததால், அதில் ஏற்படும் வெற்றி தோல்விகளைப்பற்றி என் தாய்க்கு நன்கு தெரிந்திருந்தது. அதனால் யாருமே, குறிப்பாக அவருடைய குழந்தைகள் திரைத்துறையில் நுழைவதை அவர் விரும்பவில்லை. நான் அங்கு போய் என்ன செய்யப்போகிறேன் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. நான் கல்லூரியில் படித்து, நல்ல வேலையில் சேர்ந்துவிட்டுப் பிறகு திடீரென்று ஒருநாள் எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் திரைத்துறைக்குச் செல்கிறேன் என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ரொம்பவும் கவலைப்பட்டார்கள். என் தந்தைக்குப் பெரிதும் சம்மதமே.

7.ரங்கன்: இன்று படைப்பாளியாக உருவெடுத்துவிட்ட நீங்கள், திரைப்படப் பயிற்சிப் பள்ளியில் சேர ஆசைப்பட்டதுண்டா? சேர்ந்திருந்தால் அந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ரத்னம்: நன்றாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இன்றும்கூட நான் பார்த்திராத நிறையப் படங்களைப் பார்த்திருந்திருக்கலாம். திரைப்படத்தைப் பார்த்து அதையே சுவாசித்துவரும் முப்பது நாற்பது பேருடன் சேர்ந்து இருக்கும் அனுபவத்தை வேறு எதனோடும் நிச்சயம் ஒப்பிடவே முடியாது. அது பயிற்சிக்கான அருமையான களம். என் விஷயத்தில் நான் தனியாகவே சினிமாவைக் கற்கத் தொடங்கினேன். அது தொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்றாலும், திரைப்படப் பள்ளி அனுபவம் அருமையானதாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திரைப்படங்கள்தான் என் வாழ்க்கையாகப் போகின்றன என்பதை நான் சிறு வயதிலேயே உணர்ந்திருந்தால், திரைப்படப் பள்ளியில் சேர்ந்து படித்திருப்பதே சிறந்த வழியாக இருந்திருக்கும்.

8.ரங்கன்:  நீங்கள் இளையராஜாவைச் சந்தித்தீர்கள். ஓர் அசாதாரணமான கூட்டணி தொடங்கியது இல்லையா?

ரத்னம்: இளையராஜாவைச் சந்திப்பதற்கு முன் தரணியைத்தான் சந்தித்தேன். என் வீட்டின் பின் தெருவில் இருந்த வீனஸ் ஸ்டூடியோவில்தான் ராஜ பார்வை (சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் படைப்பு) படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்தப் படத்தில் கமல் ஹாசன் கதாபாத்திரம் தங்கியிருக்கும் அறையை தரணிதான் வடிவமைத்திருந்தார். வேலைவெட்டி இல்லாத உட்லாண்ட்ஸ் குழுவைச் சேர்ந்த நானும் பி.சி. ஸ்ரீராமும் படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்வது வழக்கம். எங்கள் நண்பர் ஒருவர் அந்தப் படத்தின் ஒலிப்பதிவுப் பிரிவில் பணியாற்றினார். அதனால் எங்களால் எளிதாக அங்கே செல்ல முடிந்தது. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நாங்கள் அந்த செட்டை சுற்றிப் பார்ப்போம். அந்த செட் முதல்மாடியில் அமைக்கப்பெற்றிருந்தது. ஒரு நிஜ லொக்கேஷனில் தரணி செட் அமைத்திருந்த விதம் மிகவும் அழகாக இருந்தது. அந்த நேரத்தில் அவ்வளவு தத்ரூபமான செட்களை யாரும் அமைக்கவில்லை. அதனால் நான் தரணியைச் சந்தித்து ஓரிரு முறை பேசினேன். ஒருநாள் அவரையும் என் படத்தில் பணிபுரியும்படிக் கேட்க, அவரும் சம்மதித்தார். பின்தான் புகழின் உச்சியில் இருந்த இளையராஜாவுடனான சந்திப்பு நிகழ்ந்தது. அவருடைய இசை மகத்தானது. இதைச் சொல்லலாமா எனத் தெரியவில்லை. வேறொரு கன்னட இசையமைப்பாளரைத்தான் படத்துக்கு நிச்சயித்திருந்தோம். அவர் பெயரை இங்கு சொல்ல விரும்பவில்லை. நானே அவரைச் சந்தித்து முன்பணமும் கொடுத்திருந்தேன். பின்தான் அவர் இசையமைத்த ஒரு கன்னடப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவரது பின்னணி இசையைக் கேட்டதும் பதறிப் போய்விட்டேன். அந்தமாதிரி இசையமைப்பை என் படத்துக்கு நான் விரும்பவில்லை. அந்த இசை நன்றாக இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அது அதிபழைய இசை. அவரின் இசை இந்தப் படத்துக்கு ஒத்துவராது என்று முடிவுசெய்தேன். ஆனால் அதை அவரிடம் சொல்லும் தைரியம் எனக்கில்லை. இறுதிவரை சொல்லவில்லை. என்னை இளையராஜாவிடம் அறிமுகம் செய்துவைக்க முடியுமா என்று பாலு மகேந்திராவிடம் கேட்டேன். அவரும் அறிமுகம் செய்துவைத்தார். ராஜாவைச் சந்தித்து, நான் சிறு பட்ஜெட்டில் கன்னடப் படம் ஒன்றை இயக்குகிறேன், அதற்கு நீங்கள்தான் இசை அமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மற்ற படங்களுக்கு அவர் வாங்கும் அளவு சம்பளத்தை என்னால் தர இயலாது என்றும் கூறினேன். கண்ணை இமைக்காமல் என்னைப் பார்த்தபடி இருந்தார். அவர் அப்போது வாங்கிவந்த சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்குதான் என்னால் கொடுக்க முடிந்தது. அவரும் ஒப்புக்கொண்டார். கதையின் அவுட்லைனைச் சொன்னேன். அவர் லேசாகச் சிரித்துவிட்டு, நாம் கம்போசிங் வேலையைத் தொடங்கிவிடலாம் என்றார். ஆனால் ஒவ்வொரு முறை ஸ்டூடியோவில் நுழையும்போதும், மீண்டும் அந்தக் கன்னட இசையமைப்பாளரைப் பார்க்க நேர்ந்தால் என்ன சொல்வது என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு வருடம் கடந்தபின்னர்தான் எனக்குச் சற்று தைரியமே பிறந்தது. அந்தக் கன்னட இசையமைப்பாளர் என் முகத்தை மறந்திருப்பார் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். இங்கே நான் சொல்ல விரும்புவது இதுதான். நம் படத்துக்காக நாம் என்னவெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம் பாருங்கள். இன்றளவும், நினைத்து வருந்தும்படியான ஒரு செயலைக்கூடச் செய்யத் தயாராக இருந்திருக்கிறேன்.

9.ரங்கன்: முதல் படத்தை எடுத்து முடித்ததும், ஓர் இயக்குநரின் வேலை என்ன என்பது உங்களுக்குப் புரிந்துவிட்டதா? திரைக்கதையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்வதே இயக்குநரின் வேலை என்று சொன்னீர்கள். இயக்குநரின் வேறு பங்களிப்புகள் ஏதேனும் உண்டா?

ரத்னம்: மேற்கத்திய நாடுகளில் ஸ்டூடியோ சிஸ்டம் பின்பற்றப்படும் இடங்களில் இயக்குநர்களை ஒப்பந்தங்கள் மூலம் வேலைக்கு நியமித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். நான் கண்டவரை, அங்கே நடிகர்களைக் கையாள்வதுமட்டுமே இயக்குநரின் பிரதான வேலை. ஆனால் நம்மூரில் இயக்குநருக்கு அதிகச் சுதந்தரம் அளிக்கப்படுகிறது. நீங்கள், உங்கள் போக்கில் செயல்படலாம். உங்கள் கழுத்தை யாரும் நெரிக்கமாட்டார்கள். நீங்கள் இதைத்தான் ஷூட் செய்யவேண்டும், இவ்வளவுதான் ஷூட் செய்யவேண்டும் என்று யாரும் கட்டுப்படுத்த மாட்டார்கள். நல்ல படைப்பைத் தரவேண்டும் என்றுமட்டுமே எதிர்பார்ப்பார்கள். வாழ்க்கையைப் பணயம் வைத்து முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் செயல்படும்வரை உங்களை முழுவதுமாக நம்புவார்கள். உங்கள் விருப்பபடியே வேலை செய்யவிடுவார்கள். இங்கு இயக்குநர் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. தெளிவாக, இதுதான் காட்சி என்று தீர்மானம் செய்யப்பட்ட காட்சிகளை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். அது வெறும் செயல்படுத்தும் பணியே. அதுவும் சிறந்த நடிகர்கள் கிடைத்துவிட்டால், இயக்குநர் காட்சியமைப்பில் எழும் சிறு சிறு நிரடல்களைமட்டும் சரி செய்தால் போதும். மற்றதெல்லாம் சரியாக நடக்கும். ஆனால், காட்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வது என்றால் படமாக்கும் விதம், நடிகர்களை அருமையாக நடிக்க வைத்தல் என்று விரியும். அதுதான் ஓர் இயக்குநரின் உண்மையான சவாலான பணியாக இருக்கும். இன்றளவும், காகிதத்தில் இருப்பதை மெருகேற்றும் அந்த வழியைத்தான் நான் ஒவ்வொரு படத்திலும் முயன்றுவருகிறேன். சில நேரங்களில் அந்த வழியைக் கண்டுபிடித்திட முடியும். சில நேரங்களில் முடியாமல் போய்விடும். நாம் முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும். அதற்கு நமக்கு முழுச் சுதந்தரமும் இருக்கிறது. 

10.ரங்கன்: கேட்கவேண்டும் என்று நினைத்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்கள் படத்தில் குழந்தைகளும் வயதான பெண்களும் தொடர்ந்து இடம்பெறுவதற்குக் காரணம் என்ன?

ரத்னம்: இந்தியக் குடும்பங்கள் அப்படித்தானே இருக்கும். நம் குடும்பங்கள் மிகப் பெரியதாக, நெருக்கமான பாசப்பிணைப்பு கொண்டவையாகத்தானே இருக்கின்றன. வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கலந்துரையாடல் இல்லாத விஷயமே நம்மிடம் இருக்காதே. என் படங்கள் முழுக்க முழுக்க அந்த இந்தியத் தன்மையைத்தான் பிரதிபலிக்கின்றன.

இப்படி பல சுவாரஸ்யமான கேள்வி பதில்கள் புத்தகம் முழுக்க நிரம்பி கிடக்கின்றன. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடபட்டிருக்கும் மணிரத்னத்தின் சினிமா அனுபவங்கள் சினிமா எடுக்க நினைப்பவர்களுக்கு எதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும். 

Related Articles

கவிஞராக மாறிய மோடி! – கடல் குறித்த... சீன அதிபரின் வருகையால் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல வேண்டி இருந்தது. கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டி இருந்தது. அந்த நிகழ்வின் புகைப் படங்கள்...
உங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி ம... பணம்கொடுத்து அரசுப்பணியில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி, ட...
நமது அண்டை மாநிலங்களின் கோடைகால பானங்கள்... நமது மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கோடைகால பானங்கள் என்பது ( இயற்கையாக கிடைப்பவை ) கம்மங் கூழ், மோர், பழைய சோத்து தண்ணீர், இள...
“நம்பிக்கை தான் வாழ்க்கை” என... Cast away பறக்கும் விமானம் பழுதாகி கட்டுப்பாடின்றி கடலுக்குள் தரையிறங்க கொட்டும் பெரு மழையில் ஒற்றை ஆளாக ரப்பர் டுயூபை கட்டிப் பிடித்துக்கொண்டு சிக்க...

Be the first to comment on "” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் ” புத்தகத்திலிருந்து சில கேள்வி பதில்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*