நடிகர் நடிகைகள் : பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் ஷீட்டல்
இயக்கம் : ஸ்ரீ செந்தில்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா
எடிட்டிங் : புவன் ஸ்ரீனிவாசன்
சர்டிபிகேட் : U/A
காதல், வெயில் படத்திற்குப் பிறகு பரத்திற்கு பெரிய அளவில் வெற்றிப்படம் எதுவும் அமையவில்லை. 555 படத்திற்காக கடும் உழைப்பை கொடுத்திருந்தார் ஆனால் அந்தப்படம் பரத்திற்கு வெற்றியை தரவில்லை. ஸ்பைடர் படத்தில் லேசாக கவனிக்கப்பட்டார். தற்போது காளிதாஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் பார்மிற்குத் திரும்பியுள்ளார்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இதுவரை ஒரு ஹிட் கூட கொடுத்தது இல்லை. இந்தப் படத்திலும் ஹிட் கொடுக்க தவறியுள்ளார் என சொல்ல வைக்காமல் பின்னி பிடலெடுத்துள்ளார். குறிப்பாக காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்ற பாரதியார் பாடல் செம. பின்னணி இசை பக்கா. படத்தின் விறுவிறுப்புக்கு பெரிதும் உதவியுள்ளது. ஒளிப்பதிவும் சவுண்ட் டிசைனும் சூப்பர். குறிப்பாக ட்ரோன் ஷாட்கள் ( ஏரோபிளேன் செல்லும் காட்சி செம ) நன்றாக இருந்தன. டைட்டில் கார்டு டிசைனிங் நன்றாக இருந்தன. எடிட்டிங்கும் நன்றாக உள்ளது. ஆக மொத்தத்தில் டெக்னிக்கல் டீம் தீயாக வேலை செய்துள்ளது.
இயக்குனர் ஸ்ரீ செந்திலுக்கு வாழ்த்துக்கள். நன்றாக உழைத்துள்ளார். அவரது டீம் நன்றாக உழைத்துள்ளது. குறிப்பாக நீலத் திமிங்கிலம் விளையாட்டு பற்றிய டீடெய்லிங் வொர்க் அற்புதமாக உள்ளது. கடைசி வரை சஸ்பென்ஸ் மெயின்டயின் பண்ணது படத்தின் பக்க பலம். ஒரு சில காட்சிகள் பிரிவோம் சந்திப்போம் படத்தை நினைவூட்டியது. லொக்கேசன்கள் செம. அதே போல உடை வடிவமைப்பாளரும் நன்றாக உழைத்துள்ளார். கலை அலங்காரம் செம, குறிப்பாக பரத்தின் வீட்டில் உள்ள டிசைன்ஸ் எல்லாம் செம.
சாகறதும் , சாகடிக்கப்படறதும்தான் இந்த உலகத்துல இருக்கற பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வுன்னா இந்த உலகத்துல உயிரினமே மிஞ்சி இருக்காது, கத்தி கத்தி சொன்னா யார் சார் கேட்கறாங்க ? நம்ம கருத்தை? கத்தியைக்கையில் எடுத்தாத்தான் கவனிக்கப்படறோம், நாம எல்லாம் கூட்டமாத்தான் இருக்கோம், ஆனா தனித்தனியா வாழ்ந்துட்டு இருக்கோம், கிராமத்துக்குள்ள புதுசா ஒரு ஆள் நுழைஞ்சா அடுத்த சில நிமிஷத்துல அவன் ஜாதகத்தவே எடுத்துடுவாங்க… ஆனா நகரத்துல பக்கத்துல செத்துக் கிடந்தும் கண்டுக்காம இருக்கோம்…, சாப்பிடற சாப்பாடு மட்டும் நமக்கு ஆர்கானிக் ஃபுட் வேணும், ஆனா வாழ்ற வாழ்க்கை அப்டி எதிர்பார்க்கறதில்லை, வீட்டுப்பிரச்சனைகளுக்காக தற்கொலை பண்ணிக்கறவங்கள்ல பெண்களை விட ஆண்கள் தான் அதிகம்னு ஒரு புள்ளி விபரம் சொல்லுது, அம்மா வீட்ல தான் பொண்ணுங்க நிம்மதியா தூங்க முடியும், இதான் எங்க காலத்து சிசிடிவி, கால்குலேட்டர் வந்ததும் 8வது வாய்ப்பாடு மறந்த ஜெனரேசன் தான நீங்க… , எல்லாரும் கூட்டமா இருக்கற இடத்துல எனக்கு மட்டும் தனியா இருக்கற வேல, வேல கொடுத்தவன்ட்ட பம்மி பேசுற… வாழ்க்கை கொடுத்தவகிட்ட எரிஞ்சு விழுவியா, போலீஸ்காரனோட பொண்டாட்டியா இருக்கறது பெரிய சாதனை…, வீட்ல பேசறது இல்ல போல இருந்த வார்த்தைலாம் லவ் பண்ணும்போதே தீத்துட்டிங்களா, எப்படி எப்படியோ வளத்த பொண்ண எமன் கைல தாரவார்த்து கொடுத்துட்டேன்… , ஓடிட்டே பேசுனா மூச்சு வாங்கத் தான் செய்யும் இத போயி சந்தேகப்படலாம…, போன், சிசிடிவி வந்தபிறகு பீல்டு வொர்க்கே இல்லாம போச்சு.. உக்காந்த இடத்துலயே வேலய முடிக்கனும்னு நினைக்கிறீங்க…, அசிங்கத்தபத்தி கவலை படுறவங்க புள்ளைய ஒழுங்கா வளத்திருக்கனும்…, ஒரு பொண்ணு செத்தா அந்த வீடு எப்படி இருக்கும் தெரியுமா… போன்ற வசனங்கள் செம.
காதல், வெயில் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் பரத் நன்றாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு போலீஸ் கதாபாத்திரம் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது. நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி. தொடர்ந்து இது போன்ற கதாபாத்திரங்களை கதைகளை தேர்ந்தெடுத்தால் தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக மீண்டும் வலம் வரலாம். ஹீரோயின் பார்க்க சுமாராக இருந்தாலும் நடிப்பில் கவர்கிறார். பெண்கள் அனுபவிக்கும் தனிமையின் கொடுமை பற்றிய வசனங்கள் செம. டெபுட்டி கமிஷனராக ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நன்றாக நடித்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உத்தமனாக நடித்தவரும் இந்தப் படத்தில் ஏசி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். தங்கதுரை சில காட்சிகளே வந்தாலும் பயங்கரமாக சிரிக்க வைக்கிறார். அதேபோல சிங்கதுரை ஏட்டாக நடித்தவரும் நன்றாக நடித்துள்ளார், சில இடங்களில் சிரிக்க வைத்துள்ளார். பரத் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞனாக நடித்தவர் நன்றாக நடித்துள்ளார். மொத்தத்தில் படம் செம. கணவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் போலீஸ் பொழப்பை நாய் பொழப்பு என்று சொன்னார், படம் அந்த அளவுக்கு ரசிகர்களை தன்னோடு ஒன்ற வைத்துள்ளது.
Be the first to comment on "கணவர்கள் பார்க்க வேண்டிய படம்! – காளிதாஸ் திரை விமர்சனம்!"