2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங்கிய படம்!

The highest scoring film of 2019 Ananda Vikatan!

2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் தந்தது என்பதை இங்கு இணைத்துள்ளோம். 

மூளை முடக்குவாதத்தால் பாதிப்புக்குள்ளான, பதின்ம வயது மகளோடு தன்னந்தனியே ஒரு தந்தை நிகழ்த்தும் உணர்ச்சிப் போராட்டப் பயணமே ‘பேரன்பு.’

மனைவியைப் பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்யும் அமுதவன், தாயகம் திரும்பும்போது அவருக்காகக் காத்திருப்பது சிறப்புக் குழந்தையான பாப்பாவும்,  ‘புதுவாழ்க்கை தேடிப்போகிறேன். இனி நீயே பாப்பாவைக் கவனித்துக்கொள்’ என்னும் மனைவியின் கடிதமும். உறவினர்கள், சுற்றியிருப்பவர்கள், நம்பியவர்கள், சிறப்புக் குழந்தைகளுக்கான காப்பகப் பணியாளர்கள் என அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு நகர வாழ்க்கையின் வெம்மைப் பொழுதுகளில் பாதுகாப்பற்று அலைகிறார்கள் அப்பாவும் பாப்பாவும். சிறப்புக் குழந்தை என்றாலும் இயற்கையின் பாலியல் உந்துதல் அவர்களுக்கும் உண்டு என்ற உண்மை முகத்திலறைய அதற்கான தீர்வு தெரியாமல், திசை தெரியாமல் தடுமாறும் அமுதவன் பல முயற்சிகளில் தோற்று இறுதியில், எடுக்கக்கூடாத முடிவை எடுக்கிறார். அந்த முடிவு என்ன, அமுதவன் – பாப்பாவின் வாழ்க்கைக்கு திசை தெளிந்ததா என்பதை அழகியல் அத்தியாயங்களாக விவரித்திருக்கிறார் இயக்குநர் ராம். 

மிகக்குறைவான கதாபாத்திரங்கள், கதைக்கு வெளியே திணிக்கப்படும் விறுவிறுப்பைப் புறந்தள்ளி மெதுவாய் நகரும் காட்சிகள், வெவ்வேறு நிலப்பரப்பின் அழகியல் இயல்பைக் காட்சிகளுக்குள் ரசவாதம் செய்யும் கதைப்போக்கு, சிறப்புக்குழந்தைகளைப் பரிதாபத்துக்கு உரியவர்களாக மட்டுமே பார்த்துப் பழகிய பார்வையாளர்களுக்கு, பாலியல் உணர்வு என்னும் பிரச்னையின் வேறு பரிமாணங்களை முன்வைக்கும் துணிச்சல்… பேரன்புக்கு உரியவர் நீங்கள், ராம்!

அமுதவன் என்னும் அப்பனின் பரிதவிப்பை அப்படியே கடத்தியிருக்கிறார் மம்மூட்டி. தன் மகளைப் போலவே நடக்கப் பார்ப்பதும், ‘அது முடியாது’ என்று உணர்ந்து தெளிவதும், என்னென்னவோ செய்தும் தன் குழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியின் சிறுகீற்றை வரவழைக்க முடியாமல் ஏமாற்றத்தின் ரேகை படர்வதும், மகளின் பாலியல் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கதவு சாத்திக் குமுறுவதும் என யதார்த்தத்துக்கும் அன்புக்கும் இடையில் அலைபாயும் அமுதவனாக  மம்மூட்டி மனதை நிறைக்கிறார்.

சாதனா… பேரன்பின் நாடி நரம்புகளில் பாய்ந்தோடி உயிரூட்டும் ரத்தம்.  படம் முழுவதும் ஒரேமாதிரியான உடல்மொழிதான். இந்தச் சவாலை அழகாய் எதிர்கொண்டு, நம் உணர்வு நரம்புகளைக் கிளர்த்திவிடும் அற்புத நடிப்பு சாதனாவுடையது. 

‘எதுக்குன்னு கேட்டுட்டுப் போங்க சார்!’ என்ற ஒற்றைவரி வசனமும் அந்த ஒரு காட்சியும் போதும் அஞ்சலி ஒரு நடிப்பு ராட்சசி என்பதை நிரூபிக்க! தமிழ்சினிமாவிற்கு இன்னொரு அஞ்சலியையும் பேரன்பு மூலம் பரிசளித்திருக்கிறார் ராம். திருநங்கை மீராவாக வரும் அஞ்சலி அமீர் திருத்தமான தேர்வு! கண்களில் சோகமும் உதட்டில் சிரிப்புமாய் அவ்வளவு பாந்தம்! சமுத்திரக்கனி, பாவெல் நவகீதன், ‘பூ’ ராமு போன்றவர்களும் தேவையுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வருக்கும் மலைகளுக்கும் பிறர் அறியாத ரகசிய உரையாடல் எப்போதும் நிகழ்கிறது. அவர் மலைகளோடு காதலில் விழும்போதெல்லாம் நாம் நெகிழ்ந்துபோகிறோம். அவர் அவற்றோடு ஊடல் கொண்டாடும்போது நமக்குக் கனத்துப்போகிறது. அவரின் கேமராக்கண்கள் நிகழ்த்தும் இத்தகைய உரையாடல்கள்தான் பேரன்பை மறக்க முடியாத அனுபவமாக்குகின்றன. நகரத்துக் கசகசப்புகளினூடே ஒரு மூலையில் சிக்கித் திணறும் இரு உயிர்களின் பதைபதைப்பையும் கண்முன் நிறுத்தி வெற்றிபெறுகிறார்.

மலைமுகட்டில் தனித்திருக்கும் மரத்திற்குத் துணையாக அதனைத் தொட்டு இறங்கும் பனித்துளிபோல பேரன்பில் இறங்குகிறது பின்னணி இசை. ராமுக்காக பிரத்யேக இசை கசியும் யுவனின் விரல்களிலிருந்து இம்முறையும் ‘அன்பே அன்பின்’, ‘வான்தூறல்’  என்று பனிக்காற்றுப் பாடல்கள் நம்மை உரசிச் செல்கின்றன.

பேரன்பின் மற்றொரு பலம் அதன் வசனங்கள். ‘கக்கடைசி பூனைக்குட்டிக்கு, தான் அம்மாவின் உணவென்பது தெரியாது’ எனக் காட்சிகளுக்கு அழகூட்டும் ராமின் பேனாமுனை இறுதியாக, ‘எல்லா அப்பாக்களும் பொண்ணுக்கு ஏன் கல்யாணம் பண்றாங்க?’ என்னுமிடத்தில் உடைந்து கசிகிறது. அத்தியாயங்களைக் கவிதைத் தொகுப்பாகக் கோத்த வகையில் கவனம் ஈர்க்கிறார் படத்தொகுப்பாளர் சூர்யபிரதமன்.

இவ்வளவு யதார்த்தமும் அழகியலும் கொண்ட கதையின் போக்கில் அவ்வப்போது வந்து நம் கவனம் கலைப்பது கதைசொல்லியின் குரல். ‘இயற்கை அழகானது’, ‘இயற்கை கொடூரமானது’ என்று அத்தியாயங்களை அறிமுகப்படுத்தும்போதே பார்வையாளர்கள் முன்தீர்மானத்துடன் தயாராவது படைப்பமைதியைக் குலைக்கிறது. ஒரு படைப்பை உள்வாங்கி அதில் கரைவதற்கு முன்பே,  ‘இப்படித்தான் பார்க்க வேண்டும்’ என்ற வரைபடம் வழங்கப்படுவது பேரன்பின் பலவீனம். அஞ்சலி கத்தி எடுக்கும் காட்சி போன்ற சில காட்சிகளில் யதார்த்தத்தைத் தரையிறக்கும் நாடகத்தனம் எட்டிப்பார்க்கிறது.  ‘இறுதியில் நடைபெறும் திருமணம் உண்மையில் பாப்பாவின் பிரச்னைக்கான முழுமையான தீர்வுதானா?’ என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தச் சின்னச் சின்னக் குறைகளுக்கு அப்பால் வாழ்க்கையின் அர்த்தத்தை, இயற்கையின் இயல்பை, மனிதர்களுக்குள் வற்றாது பாய்ந்துகொண்டிருக்கும் பேரன்பின் நீரோட்டத்தைப் படமாக்கித் தந்ததற்கு இயக்குநர் ராமும் தயாரிப்பாளர் தேனப்பனும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Related Articles

4 years of எனக்குள் ஒருவன் – மார்ச... இயக்குனர் பிரசாத் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் என்ற ரீமேக் திரைப்படம் வெளியாகி இன்றோடு ( மார்ச் 6, 2015 ) நான்கு வர...
ஜோதிகாவின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக... அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்த தக்க பதில்களே கிடை...
ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப... இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அருண் மர்வாஹா என்பவர் கைது செய்யப்பட்...
இந்தியாவில் குழந்தைகள் திருமணம் குறைந்து... யுனிசெப் அமைப்பு குழந்தைகள் திருமணம் இந்தியாவில் வெகுவாக குறைந்து வருவதாக யுனிசெப் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.குழந்தை திருமணம் குறித்த யுன...

Be the first to comment on "2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங்கிய படம்!"

Leave a comment

Your email address will not be published.


*